பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-ன் இயக்குநர் விவேக் பன்சால், தனது குடும்பத்துடன் கங்கை நதியில் நீராடச் சென்ற பயணத்தில் மேற்கொண்ட ‘ஆடம்பர’ ஏற்பாடுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட விவேக் பன்சால் திட்டமிட்டிருந்தார். ஒரு உயரதிகாரி செல்லும்போது அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவது வழக்கம். ஆனால், அதையும் தாண்டி இவரது பயணத்திற்காக ஒரு நீண்ட பட்டியலே அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டது.
அதில், அவர் குளித்து முடித்தவுடன் பயன்படுத்துவதற்குத் தேவையான டவல், சோப்பு, சீப்பு, கண்ணாடி மட்டுமல்லாது, ஆண்களுக்கு 6 செட் மற்றும் பெண்களுக்கு 2 செட் என உள்ளாடைகள் வரை வாங்கி படித்துறையில் தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், அவர் தங்கும் அறையில் உலர் பழங்கள், ஷேவிங் கிட், தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவை இருக்க வேண்டும் என்றும், இந்த ஏற்பாடுகளைக் கவனிக்க 50 ஊழியர்கள் நியமிக்கப்பட்டதும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நஷ்டத்தில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் இயக்குநர், தனது சொந்த ஆன்மிகப் பயணத்திற்கு இவ்வளவு ஆடம்பரமான ஏற்பாடுகளையும், இத்தனை ஊழியர்களையும் பயன்படுத்தியது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இது பேசுபொருளானதை அடுத்து, விவேக் பன்சால் தனது பிரயாக்ராஜ் பயணத்தை ரத்து செய்தார்.
இந்த விவகாரம் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில்:
“விவேக் பன்சாலின் இந்தச் செயல் முற்றிலும் முறையற்றது மற்றும் விதி மீறியது. இத்தகைய ஆடம்பர ஏற்பாடுகளை ஒருபோதும் ஏற்க முடியாது. இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் அவர் திருப்திகரமான விளக்கம் அளிக்காவிட்டால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் பொதுத்துறை நிறுவன உயர் அதிகாரிகளின் இத்தகைய அத்துமீறல் அரசு வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
