சீனாவில் 10 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தை தனக்குச் சொந்தமான பரிசுப் பணத்தை அபகரித்துக் கொண்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் விவாகரத்து பெற்ற நிலையில், அந்த சிறுவன் தனது தந்தையுடன் வசித்து வருகிறான்.
மேலும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உறவினர்களால் வழங்கப்பட்ட சுமார் 80,000 இந்திய மதிப்பில் சுமார் ரூ.11 லட்சம் பரிசுத் தொகையை, தந்தை தனது இரண்டாவது திருமணச் செலவுகளுக்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தனது பணத்தைத் திருப்பித் தர மறுத்த தந்தைக்கு எதிராக அந்தச் சிறுவன் சட்டப் போராட்டத்தில் இறங்கினான்.
இந்த வழக்கை விசாரித்த சீன நீதிமன்றம், சிறுவனுக்கு ஆதரவாக அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. உறவினர்கள் சிறுவனுக்கு அன்பளிப்பாக வழங்கிய பணம் அவனுக்கே சொந்தமானது என்றும், அதைத் தந்தை தனது சுயதேவைகளுக்காகப் பயன்படுத்த உரிமை இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனவே, சிறுவனிடமிருந்து எடுக்கப்பட்ட முழுத் தொகையையும் தந்தை உடனடியாகத் திருப்பித் தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
சீனக் கலாச்சாரத்தில் சிவப்பு உறையில் வைத்து வழங்கப்படும் இந்தப் பரிசுப் பணம் தொடர்பான இந்தத் தீர்ப்பு, குழந்தைகளின் நிதி உரிமைகளை நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ளதாகப் பலரால் பாராட்டப்படுகிறது.
