முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது ஒரு வெட்கக்கேடான விஷயம் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆர் யாரைத் தீயசக்தி என்று கூறினாரோ, அதே கட்சியில் ஓபிஎஸ் இணைந்திருப்பது அவரது சுயநலத்தையே காட்டுகிறது என்று தெரிவித்தார்.
அதிமுகவில் மூன்று முறை முதல்வராக இருந்த ஒரு நபர், இன்று தனது அடையாளத்தைத் தேடி திமுகவிடம் தஞ்சமடைந்திருப்பதை மனிதராகப் பார்க்கவே வெட்கமாக இருப்பதாக அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும் பேசிய கே.பி.முனுசாமி, ஓபிஎஸ் ஒரு மிகப்பெரிய சந்தர்ப்பவாதி என்பதை எடப்பாடி பழனிசாமி முன்பே கணித்திருந்தார் என்றும், அதனால்தான் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க அவர் ஒருபோதும் விரும்பவில்லை என்றும் கூறினார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், பிறகு சசிகலாவையே கட்சியில் சேர்க்கச் சொன்னது அவரது இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.
அதிமுக உடையவில்லை என்றும், தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கமே உள்ளனர் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
