
மத்திய கிழக்கு ஆசியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர் மூண்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க தளங்கள் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது ஈரான் மிகக்கடுமையான பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ‘ஆபரேஷன் லயன்ஸ் ரோர்’ (Operation Lions Rore) என்ற பெயரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தின. தலைநகர் தெஹ்ரானில் உள்ள உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் இல்லம் மற்றும் அலுவலக வளாகம் குறிவைத்துத் தகர்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் கமேனி, அவரது மகள், பேரன், மருமகள் மற்றும் மருமகன் என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் உயிரிழந்தனர்.
தங்கள் இமாமின் படுகொலைக்குக் பழிவாங்குவோம் என அறிவித்துள்ள ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), “எதிரிப் படைகளுக்காக நரகத்தின் வாயில்களைத் திறந்து வைப்போம்; வரலாற்றிலேயே மிகக் கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.
ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் மத்திய கிழக்கு நாடுகள் அதிர்ந்துள்ளன:
உலகின் பரபரப்பான துபாய் சர்வதேச விமான நிலையம் தாக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது. ஜெபல் அலி கடல் பகுதியில் அமெரிக்காவிற்கு வெடிமருந்து கொண்டு சென்ற கப்பல் டிரோன் தாக்குதலுக்கு உள்ளானது.
குவைத்: அப்துல்லா முபாரக் பகுதியில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம் மீது 4 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 12 டிரோன்கள் பாய்ந்தன. இதில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கத்தார்: தலைநகர் தோஹாவில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளன. யுஏஇ (UAE): தங்கள் நாட்டை நோக்கி வந்த 137 ஏவுகணைகளில் 132-ஐ சுட்டு வீழ்த்தியதாக ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழல் குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரான் வரம்பு மீறினால், உலகம் இதுவரை பார்த்திராத வகையில் அவர்கள் மீது பலத்தைப் பயன்படுத்துவோம்” எனப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் இந்தப் போர் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார். உடனடியாகப் போரை நிறுத்துமாறு இரு தரப்பையும் வலியுறுத்தி வருகின்றன. ஈரான் – இஸ்ரேல் இடையிலான இந்த நேரடி மோதல் மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கமாக இருக்குமோ என்ற அச்சம் சர்வதேச சமூகத்தில் எழுந்துள்ளது.
