ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
நடப்புச் சாம்பியனான இந்திய அணி, பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்று வெற்றி பெற்றால், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பல புதிய சாதனைகளைத் தடம் பதிக்கும். டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு முறை கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெறும்.
இதுவரை எந்த ஒரு அணியும் தனது சொந்த மண்ணில் டி20 உலகக்கோப்பையை வென்றதில்லை. அந்தச் சாதனையை இந்தியா இன்று நிகழ்த்த வாய்ப்புள்ளது. சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்புடன் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் நடப்புச் சாம்பியன் இந்தியாவாகும்.
ஐசிசி தலைவர் ஜெய் ஷாவின் சொந்த ஊரான அகமதாபாத்தில் நடக்கும் இந்த இறுதிப் போட்டியில், பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். நியூசிலாந்து வாரியத் தலைவர் ரோஜர் டூஸ், ஜிம்பாப்வேயின் தவெங்வா முகுலானி மற்றும் தென்னாப்பிரிக்காவின் முகமது மூசாஜி ஆகியோர் நேரில் வந்து போட்டியை ரசிக்க உள்ளனர். வங்கதேச வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் மெல்போர்னில் இருப்பதால் அவர் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.
அதே சமயம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி இந்த இறுதிப்போட்டிக்கு வரமாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் ஏற்பட்ட இழுபறி மற்றும் இந்தியாவிலிருந்து போட்டிகளை மாற்ற வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவித்தது போன்ற காரணங்களால் பிசிசிஐ – பிசிபி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், நக்வியின் வருகை தவிர்க்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கத்தார் நாட்டின் தோஹாவில் மார்ச் 25 முதல் 27 வரை நடைபெறவிருந்த ஐசிசி-யின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கூட்டம் ஏப்ரல் மாதம் ஆசியாவில் உள்ள வேறொரு நாட்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
