தூத்துக்குடி மற்றும் தென்காசியில் இன்று பரவலாக மழை பெய்ததால் சற்று வெப்பம் குறைந்துள்ளது.
தென் இந்தியப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தூத்துக்குடி, தென்காசியில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்தது.
இதன் காரணமாக, வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி உப்பளங்களில் மழை நீர் தேங்குவதால் உப்பு உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காலையில் பெய்த மழையால் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்ற மாணவ- மாணவிகள், வேலைக்குச் செல்வோர், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் கடும் சிரமத்துக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.