ஸ்ரீதர் தனது ‘சித்ராலயா’ நிறுவனம் மூலம் ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகையாக ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ரூ.25,000 கொடுத்தார்.
படம் நின்றுவிட்ட நிலையில், சில காட்சிகள் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகையாக நினைத்து அந்தப் பணத்தை ஸ்ரீதரும் கேட்கவில்லை. அந்த நேரத்தில் புதுமுகங்களை வைத்து ‘காதலிக்க நேரமில்லை’ என்னும் படத்தை எடுத்தார்.
ஏற்கெனவே, எம்.ஜி.ஆருடன் இணைந்து செய்வதாக இருந்த படம் நின்று போன நிலையில், மீண்டும் அவரை அணுகுவதா? என்று யோசித்தார். இருந்தாலும் நண்பர் ராஜேந்திரகுமாரின் ஆலோசனையை ஏற்றார்.
இயக்குநர் பி.வாசுவின் தந்தையும், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளருமான பீதாம்பரம் மூலம் எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆரும் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ஸ்ரீதர் படத்தில் நடிக்க சம்மதித்தார். எம்.ஜி.ஆரின் உயர்ந்த பண்புக்கும் எப்படி எல்லாம் சிந்தித்து மற்றவர்களை கவுரவப்படுத்துகிறார் என்பதற்கும் ஒரு உதாரணம்…
அப்போது ஸ்ரீதருக்கு ஏற்பட்ட நெருக்கடியை எம்.ஜி.ஆர். அறிந்தே இருந்தார். ஸ்ரீதராகத்தான் விரும்பி தனது படத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எம்.ஜி.ஆர். நினைத்தால் ‘ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கலாம்.
ஆனால், ஒப்பனையாளர் பீதாம்பரத்திடம் எம்.ஜி.ஆர். கூறியதுதான் அவரது உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தும். ‘‘ஸ்ரீதர் பெரிய இயக்குநர். திடீரென்று என்னை வந்து சந்தித்துப் பேசினால், நெருக்கடியில் இருந்து மீள எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் போய் பார்த்தார் என்று செய்திகள் வெளியாகும். நான் போய் ஸ்ரீதரை பார்ப்பதும் சரியாக இருக்காது.
அதனால், இருவருக்கும் பொதுவாக நம்பியார் வீட்டில் மதிய உணவுக்கு ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள். அங்கு சந்தித்துப் பேசி புதிய படம் பற்றி முடிவு செய்யலாம்’’ என்று பீதாம்பரம் மூலம் சொல்லி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.
இதைக் கேட்டு சிலிர்த்துப் போனார் ஸ்ரீதர். இருந்தாலும் எம்.ஜி.ஆர். வீட்டில் நான் அவரை சந்திப்பதுதான் முறை என்று கூறி, மறுநாளே ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் சந்தித்துப் பேசினார்.
வழக்கம் போல எம்.ஜி.ஆரின் உணவு உபசரிப்புக்குப் பிறகு தன் நிலைமையைச் சொல்லி நீங்கள் எனக்கு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அதற்கு சம்மதம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.
ஏற்கனவே கிடைத்த அனுபவத்தால் எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்து பேசினார் ஸ்ரீதர். ‘‘என் மீது பொறாமை கொண்டவர்கள் நமக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக என்னைப் பற்றி உங்களிடம் என்ன சொன்னாலும் நீங்கள் நம்ப வேண்டாம். என்னிடமே நேரடியாக விளக்கம் கேளுங்கள்’’ என்று எம்.ஜி.ஆரிடம் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார்.
அவரது நிலைமையை உணர்ந்து மற்ற படங்களை விட ஸ்ரீதர் படத்துக்கு முன்னுரிமை அளித்து 3 மாதங்களில் நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்த எம்.ஜி.ஆர்., ஸ்ரீதரே எதிர்பார்க்காத ஒன்றை செய்தார்.
அவ்வாறு, தான் உறுதி அளித்ததை கடிதமாக எழுதிக் கொடுத்து கையெழுத்து போட்டு ஸ்ரீதரிடம் கொடுத்தார். ‘‘இது நீங்கள் பைனான்ஸ் பெறுவதற்கு உதவும்’’ என்றார். எந்தக் கோணங்களில் எல்லாம் சிந்தித்து செயல்படுகிறார் என்று ஸ்ரீதர் வியந்துபோனார்.
ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆர். கடிதம் கொடுத்திருப்பதை அறிந்து, கிரஸென்ட் மூவிஸ் நிறுவனத்தார் அவரை சந்தித்துப் படத்துக்கு பைனான்ஸ் செய்ததுடன், பல ஏரியாக்களின் விநியோக உரிமையையும் வாங்கிக் கொண்டு அட்வான்ஸ் தொகையை அளித்தனர். இப்படி உருவான படம்தான் எம்.ஜி.ஆர்-ஸ்ரீதர் கூட்டணியில் உருவாகி வெள்ளி விழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’ திரைப்படம்.
அந்தப் படத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆருக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்தார் ஸ்ரீதர். அப்போது ஸ்ரீதருக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக தனக்கு அட்வான்ஸாக கொடுத்த ரூ.25,000-த்தை எம்.ஜி.ஆர். கழித்துக் கொள்ளச் சொன்னார். ஸ்ரீதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உள்ள கெராபாரி பகுதியில், சனிக்கிழமை (ஏப்ரல் 11) அன்று மாலை வேளையில் ஒரு மிகக்கோரமான சாலை விபத்து நிகழ்ந்தது. [மேலும்…]
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த, டெல்லி அரசு மின்சார வாகனக் கொள்கை 2026-2030 வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையின் இவி [மேலும்…]
சீன உள்மங்கோலிய தாராள வர்த்தக சோதனை மண்டலம் பற்றிய ஒட்டுமொத்த திட்டம் வெளியிடப்பட்டதுடன், சீனாவில் தாராள வர்த்தக சோதனை மண்டலங்களின் எண்ணிக்கை 23ஆக [மேலும்…]
அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, தனது நாட்டின் டிஜிட்டல் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் பிரான்ஸ் அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. [மேலும்…]
பெய்ஜிங்கில் 10ஆம் நாள் நடைபெற்ற மேசை பந்துத் தூதாண்மையின் 55ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டம் மற்றும் சீன-அமெரிக்க இளைஞர்களின் உடற்பயிற்சிப் பரிமாற்ற நிகழ்ச்சிகளின் துவக்க [மேலும்…]
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், அரையாண்டு அடிப்படையில் சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில், அரையாண்டின் முதல், 30 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு, 5 [மேலும்…]