தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளுங்கட்சியான திமுக தனது மெகா கூட்டணியைப் பராமரிப்பதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த முறை 13 கட்சிகளுடன் களம் கண்ட திமுக, இந்த முறை 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு மற்றும் தொகுதிகளைத் தேர்வு செய்வதில் கடும் இழுபறி நீடிக்கிறது.
மேலும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க போன்ற கட்சிகளுடன் முதற்கட்டப் பங்கீடு முடிந்துள்ள போதிலும், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் கூடுதல் இடங்களைக் கோருவதால் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, தேமுதிக போன்ற புதிய வரவுகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியாத நிலையும் நிலவுகிறது.
இந்நிலையில் மற்றொரு முக்கிய சவாலாக, தொகுதிப் பங்கீடு முடிந்த கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் குறிப்பிட்ட தொகுதிகளின் பட்டியலை (Optional Seats) அளித்து திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. உதாரணமாக, 28 இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, 39 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கி அதில் தங்களுக்கு விருப்பமான தொகுதிகளைக் கேட்கிறது.
அதேபோல் ம.தி.மு.க மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும் குறிப்பிட்ட தொகுதிகளுக்காக அடம்பிடிப்பதால், திமுக வேட்பாளர்கள் அதே தொகுதிகளில் போட்டியிட விரும்பி அளித்துள்ள மனுக்கள் மீதான நேர்காணல் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஒருபுறம் கூட்டணிக் கட்சிகளின் பிடிவாதம், மறுபுறம் சொந்தக் கட்சி நிர்வாகிகளின் அதிருப்தி என இருமுனைத் தாக்குதல்களைச் சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் திமுக தலைமை உள்ளது.
