சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று.
அதனால் நவம்பர் 14ஆம் தேதி ஆகிய இன்று இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் உரிமைகள் காக்கப்படவும், மாண்புடன் நடத்தப்படவும், ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 20ஆம் தேதியை உலகக் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறது.
நாம் அன்றைய தினத்தில் மட்டும் குழந்தைகளைப் பேசி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி விட்டுக் கடந்து சென்று விடுகிறோம். குழந்தைகளைக் கொண்டாட மறந்துவிடுகிறோம்.
குழந்தைகள் அன்றாடம் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அவர்களது சிரிப்பு, கள்ளம் கபடமற்ற அன்பு, எதார்த்தமாய் கேட்கும் கேள்விகள், துறுதுறுவென்று ஓடி விளையாடும் செயல்கள் என அனைத்தும் கொண்டாடப்பட வேண்டியவை.
நாம் தற்போது ஓடாதே, பேசாதே, சத்தமாய் சிரிக்காதே, சேட்டை செய்யாதே, என்று கட்டுப்பாடுகளை விதித்து குழந்தைகளை இயல்பாக வாழவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறோம்.
குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதிப்போம். அவர்கள் நன்றாக விளையாடட்டும், சிரிக்கட்டும், கேள்விகள் பல கேட்கட்டும், வரைவது பிடித்தால் வரையட்டும், நடனம் பிடித்தால் ஆடட்டும் அவர்களுக்கு தேவையானதை அவர்களிடமே கேட்டறிந்து கொடுப்போம்.
எதையும் குழந்தைகள் மீது திணிக்காமல் இருக்க நாம் பழகிக் கொள்வோம்.

இன்றைய உலகில் பல குழந்தைகள் படிப்பதையும், கலை, விளையாட்டுப் பயிற்சியில் ஈடுவதையும் சுமையாக நினைத்து மகிழ்ச்சி இன்றி இருக்கின்றனர்.
அந்தச் சூழலை மாற்றிடுவோம்.
எனவே, குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் நின்றிட வேண்டும்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவும் கிடைக்க வேண்டும்.
போரினால் மரித்துப் போகும் குழந்தைகள் உயிர் காக்கப்பட வேண்டும். குழந்தைகளை ஒரு நாள் மட்டும் கொண்டாடாமல் எல்லா நாட்களும் கொண்டாடுவோம்.
