சரியும் டாலரின் மதிப்பு: பொருளாதார வீழ்ச்சியை நோக்கி அமெரிக்கா

Estimated read time 1 min read

அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து வரும் சூழலில், டாலரிலிருந்து படிப்படியாக விலகி இந்தியா தனது தங்கத்தின் இருப்பை கணிசமாக உயர்த்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற உடனேயே டாலரின் மதிப்பு 9 சதவீதம் சரிந்தது. குறிப்பாக டாலர் யூரோவுக்கு எதிராக 13.5 சதவீதமும், சுவிஸ் பிராங்குக்கு எதிராக 13.9 சதவீதமும் மற்றும் ஜப்பானின் யென்னுக்கு எதிராக 6.4 சதவீதமும் டாலரின் மதிப்பு குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது மிகப்பெரிய சரிவாக கருதப் பட்டது.

பொதுவாகவே உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க டாலரே முதன்மையாக இருந்து வந்தது. டாலரின் செல்வாக்கு காரணமாகவே மற்ற நாடுகளின் மீதும் பிற நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் மீதும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வந்தது.

நீண்டகாலமாகவே உலக நாடுகள் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, தங்கள் மத்திய வங்கிகளைப் புவிசார் அரசியல் அபாயங்களிலிருந்து பாதுகாக்க முயற்சி செய்து வந்தன.

இப்போது அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்துள்ள நிலையில், இந்தியா உட்பட உலக நாடுகள் டாலரில் இருந்து விலகிச் செல்ல தொடங்கியுள்ளன.

2021ம் ஆண்டு ஜூன் மாதம் தனது தேசிய கருவூலத்தில் இருந்து அமெரிக்க டாலரை முற்றிலுமாக நீக்குவதாக ரஷ்யா அறிவித்தது. இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கணிசமாக குறைத்தது.

ஏற்கெனவே அமெரிக்க பெட்ரோ டாலருக்கு எதிராக பெட்ரோ யுவான் என்ற நாணயத்தை உலகின் முன்னணி எண்ணெய் இறக்குமதியாளரான சீனா பயன்படுத்தி வருகிறது. இது பெட்ரோ டாலரின் மதிப்பை வெகுவாக பாதித்துள்ளது.

அடுத்ததாக சீனாவும், சவூதியும் அமெரிக்க கருவூல பத்திரங்களை விற்கத் தொடங்கியுள்ளன. முதல்படியாக அமெரிக்க கருவூலங்களுடன் நேரடிப் போட்டியாக சவூதி அரேபியா 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பத்திரங்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவும் அமெரிக்கக் கருவூல பத்திரங்களை வெகுவாக குறைத்துள்ளது.

ஓராண்டுக்கு முன் 234 பில்லியன் டாலராக இருந்த அமெரிக்க கருவூல பத்திரங்களின் இருப்பை கடந்த நவம்பரில் 186.5 பில்லியன் டாலராக இந்தியா குறைத்துள்ளது. சீனாவும் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க கடன் பத்திரங்களைக் குறைத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க கடன் பத்திரங்களை விற்றால், மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையிலும் டென்மார்க்கைச் சேர்ந்த மூன்று முக்கிய ஓய்வூதிய நிதி நிறுவனங்கள், ஜனவரி மாத இறுதிக்குள் அமெரிக்க கருவூலப் பத்திரங்களிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளதன.

டாலரின் சரிவைத் தொடர்ந்து சீனா, ரஷ்யா இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் டாலர் இருப்புகளைக் குறைப்பதற்கான புதிய வழியாக தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. உலக தங்க கவுன்சிலின்படி, போலந்து 95 டன்னும், கஜகஸ்தான் 49 டன்னும் மற்றும் பிரேசில் 43 டன்னும் தங்கத்தை வாங்கியுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை 14 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது கடந்த பத்து மாதங்களில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு, இந்திய ரிசர்வ் வங்கியின் 880 டன் தங்க இருப்பிலிருந்து வந்ததாகும்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஆண்டில் 5 சதவீதம் மட்டுமே அதிகரித்தது. ஆனாலும் மொத்த கையிருப்பு 12 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது தங்கம் மட்டுமே ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணி கையிருப்புகளின் மதிப்பை 70 சதவீதம் உயர்த்தியுள்ளது.

மேலும், எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்கான பண பரிமாற்றத்தை எளிதாக்குவதற்காக, பிரிக்ஸ் நாடுகள் தங்கள் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்களைப் பயன்படுத்தவேண்டும் என்றும் இந்தியா முன்மொழிந்துள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவின் தலைமையில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் முதல்முறையாக பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் தங்கள் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களை இணைப்பது குறித்து பரிசீலிக்க உள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலகளாவிய அந்நியச் செலாவணி இருப்புகளில் அமெரிக்க டாலரின் பங்கு 2024-ல் 58.5 சதவீதமாக ஆகக் குறைந்துள்ளது. இது 1999-ல் 71 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

உலக நாடுகள் அமெரிக்க டாலரிலிருந்து விலகிச் செல்வது அமெரிக்காவில் கடும் பணவீக்கத்தைத் உண்டாக்கும் என்றும், அமெரிக்காவின் சமூக மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author