
மத்திய கிழக்கில் நீடித்து வரும் ஈரான் – இஸ்ரேல் போர் தற்போது அண்டை நாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. குவைத்தில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அங்கு பணிபுரிந்து வந்த இந்தியத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் அங்கிருந்த கட்டிடங்களும் பலத்த சேதமடைந்துள்ளதாக குவைத் மின்சக்தி அமைச்சகம் திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் தனது அண்டை நாடுகளான வளைகுடா அரபு நாடுகள் மீதும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் போரில் இதுவரை 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களும் போரில் குதித்துள்ளதால், செங்கடல் வழியாக நடைபெறும் உலக வர்த்தகம் 12% வரை பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. போரின் தீவிரம் அதிகரித்து வருவதால் உலக சந்தையில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
