ரயில்வே துறை இன்று (ஏப்ரல் 1) முதல் டிக்கெட் ரத்து மற்றும் ரீஃபண்ட் விதிகளில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இனிமேல் உங்கள் பயணத்தைத் திட்டமிடும்போது ரொம்பவே உஷாராக இருக்க வேண்டும். முன்னதாக, ரயில் கிளம்புவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு வரை டிக்கெட்டை ரத்து செய்தால் ஒரு பகுதி பணம் திரும்பக் கிடைக்கும்.
ஆனால், புதிய விதிகளின்படி, ரயில் கிளம்புவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாகவே டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும். இந்த 8 மணி நேர ‘டெட்லைன்’ தவறிவிட்டால், நீங்கள் ஒரு பைசா கூட ரீஃபண்ட் பெற முடியாது; உங்கள் மொத்தப் பணமும் கோவிந்தா தான். குடும்பத்துடன் பயணம் செய்ய டிக்கெட் புக் செய்திருந்தாலும், இந்த விதி அனைவருக்கும் பொருந்தும்.
நீங்கள் 72 மணி நேரத்திற்கு முன்பே ரத்து செய்தால் முழுப் பணமும் (குறைந்தபட்ச கட்டணம் தவிர்த்து) கிடைக்கும். 24 முதல் 72 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 75% பணமும், 8 முதல் 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50% பணமும் மட்டுமே திரும்பக் கிடைக்கும். கடைசி நேரத்தில் பிளான் மாறும் பயணிகளுக்கு இந்த புதிய விதிமுறை பாக்கெட்டைப் பதம் பார்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
