சீனத் தேசிய வனத்தொழில் மற்றும் புல்வெளிப் பணியகம் வெளியிட்ட தகவலின்படி, தேசியப் பூங்காவை முக்கியமாகக் கொண்ட இயற்கைப் பாதுகாப்பு நில அமைப்பு முறைகளின் கட்டுமானம் மற்றும் காட்டு விலங்கு தாவரப் பாதுகாப்புத் திட்டம் மூலம், சீனாவில் அழிவின் விளிம்பிலுள்ள காட்டு விலங்குகள் மற்றும் தாவர வகைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், உயிரினப் பல்வகைத் தன்மை பாதுகாப்பில் பெரும் சாதனைகள் காணப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில், காட்டு விலங்கு மற்றும் தாவரங்களின் பாதுகாப்பைச் சீனா பெரிதும் முன்னேற்றி வருகிறது. இப்பணிக்காக பாண்டா, ஆசிய யானை, வெள்ளை அரிவாள் மூக்கன் முதலிய விலங்கு மற்றும் பறவைகளின் தேசியப் பாதுகாப்பு மற்றும் ஆய்வு மையங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன.
திபெத்திய மான்களின் எண்ணிக்கை 1980ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்த 20ஆயிரத்திலிருந்து தற்போது 70ஆயிரமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.