மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தனது இணைவு பெற்ற பள்ளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 3-வது மொழிப்பாடத்தை (Third Language) இன்னும் ஒரு வார காலத்திற்குள் தொடங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழிப்பாடத்தை ஒரு வாரத்திற்குள் கற்பிக்கத் தொடங்க வேண்டும். 3-வது மொழிப்பாடத்திற்கான புதிய பாடப்புத்தகங்கள் இன்னும் முழுமையாக சந்தைக்கு வராத சூழலில், புத்தகங்கள் வெளியாகும் வரை காத்திருக்காமல் பயிற்சியைத் தொடங்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடப்புத்தகங்கள் கையில் கிடைக்கும் வரை, ஆசிரியர்கள் அந்தந்த மொழிக்கான அடிப்படைப் பயிற்சி மற்றும் அறிமுகப் பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், மாணவர்களின் மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த 3-வது மொழிப்பாடம் முன்னெடுக்கப்படுகிறது. வழக்கமான ஆங்கிலம் மற்றும் தமிழ் (அல்லது இந்தி/மாநில மொழி) தவிர்த்து, மூன்றாவது ஒரு மொழியைக் கற்கும் வாய்ப்பு இதன் மூலம் மாணவர்களுக்குக் கிடைக்கிறது.
பாடப்புத்தக வரத்து தாமதமாவதால் மாணவர்களின் கல்வியாண்டு பாதிக்கப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே மத்திய கல்வி வாரியம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனால் சிபிஎஸ்இ பள்ளிகள் தற்போது அதற்கான பாடவேளைகளை ஒதுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
