மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: 19-ம் தேதி டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!

Estimated read time 1 min read

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 30-ம் தேதி நிறைவு பெறுகிறது.

விழாவில் முக்கிய விழாவான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை (சித்திரை 15-ம் தேதி) கோவிலின் வடக்கு, மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் நடைபெற உள்ளது. திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வைத்திருப்பவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கே அனுமதி என்ற முறையிலும் தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

திருக்கல்யாணத்திற்கான கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி கோவில் இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் வருகிற 19-ம் தேதி முதல் 22-ம் தேதி இரவு 9 மணி வரை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு நபரால் ரூ.500 கட்டண சீட்டு 2 மட்டுமே பெற முடியும்.

ரூ.200 கட்டண சீட்டை ஒருவர் 3 வரை பெறலாம். ஆனால் ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டண சீட்டை பெற முடியாது. பிறந்த தேதி சரியாக பூர்த்தி செய்து இருக்க வேண்டும். ஒரு பதிவுக்கு ஒரு அலைபேசி எண் மட்டுமே பயன்படுத்த முடியும். பாதுகாப்பு கருதி திருக்கல்யாணத்தன்று குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்கவும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான எல்லீஸ்நகரில் அமைந்துள்ள யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் ரூ.500, ரூ.200 கட்டண சீட்டை 19-ம் தேதியில் இருந்து நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

ஆதார் நகல், புகைப்படத்துடன்கூடிய அடையாள சான்று, அலைபேசி எண், இ-மெயில் முகவரி அவசியம். கூடுதல் எண்ணிக்கையில் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து அலைபேசி, இ-மெயிலில் 23-ம் தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author