நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் சாதித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் நவடாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, 2014ஆம் ஆண்டுக்கு முன் நாட்டின் நிலைமையை மறக்க முடியாது. பெரும்பாலான மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர் அல்லது வீடற்றவர்களாக இருந்தனர்.
ஏழைகளுக்கு எரிவாயு இணைப்பு கிடைக்கவில்லை. நான் ஏழ்மையில் இருந்து பிழைத்திருக்கிறேன். ஏழைகளின் வேதனை எனக்கு நன்றாக புரியும். நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை கடந்த 10 ஆண்டு கால ஆடசியில் சாதித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மத்திய அரசு நாட்டிற்காக துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமானது.கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் நலனுக்காக எடுக்கப்பட்ட பல பெரிய முடிவுகளை பீகார் மக்கள் பார்த்துள்ளனர். இன்று இந்தியாவிலும், பீகாரிலும் நவீன உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இன்று பீகாரில் விரைவு சாலைகள் அமைக்கப்படுகின்றன. ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படுகின்றன. வந்தே பாரத் போன்ற ரயில்கள் அதிகரித்து வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.
பீகாரில் பாஜக 17 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் JD (U) 16 இடங்களிலும் போட்டியிடுகிறது. லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) மாநிலத்தில் ஐந்து மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்) மற்றும் ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சி (ஆர்எல்எஸ்பி) தலா ஒரு இடத்தில் போட்டியிடுகின்றன.