பிரிக்ஸ் நாடுகளின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான துணை வெளியுறவு அமைச்சர் மற்றும் சிறப்புத் தூதர்களின் கலந்தாய்வு ஏப்ரல் 23 முதல் 24ஆம் நாள் வரை புதுதில்லியில் நடைபெற்றது. மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்புத் தூதர் ஜாய் ஜுன் சீன பிரதிநிதி குழுவுக்கு தலைமை தாங்கி இக்கலந்தாய்வில் கலந்துகொண்டார்.
அவர் கூறுகையில், தற்போது மத்திய கிழக்கின் நிலைமை முக்கிய காலகட்டத்தில் உள்ளது என்றார். பிரிக்ஸ் நாடுகள் நீதியையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்கவும், மேலும் ஒருமித்த கருத்தை உருவாக்கவும், மத்திய கிழக்கிலும் உலகிலும் ஆக்கப்பூர்வமான, நிலையான, பயனுள்ள பிரிக்ஸ் வலிமையைச் செலுத்தவும் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் அக்கறை கொண்ட விவகாரங்கள் குறித்து இக்கலந்தாய்வில் கலந்துகொண்ட அனைத்து தரப்புகளும் கருத்துக்களை ஆழமாக பரிமாறிக்கொண்டன. அடுத்த ஆண்டில் சீனா பிரிக்ஸின் தலைமை பதவி வகிக்கும் நாடாக இருக்கும் போது, மத்திய கிழக்கு விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கலந்தாய்வை நடத்துவதை அவை ஒப்புக்கொண்டன. இக்கூட்டத்துக்கு பிறகு, நடப்பு ஆண்டில் தலைமை பதவி வகிக்கும் நாடான இந்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இக்கலந்தாய்வின் போது, ரஷிய வெளியுறவுத் துணை அமைச்சர் போரிசென்கோ, ஈரானின் வெளியுறவு அமைச்சரின் உதவியாளர் ஷூஷ்தாரி ஆகியோர் ஜாய் ஜுன்னுடன் தனித்தனியாக சந்திப்பு நடத்தி, பிரதேச நிலைமை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
மேலும், மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்புத் தூதர் ஜாய் ஜுன், ஏப்ரல் 23ஆம் நாள் புது தில்லியில் இந்திய வெளியுறவு துறை செயலாளர் மல்ஹோத்ராவுடன் சந்திப்பு நடத்தினார். பிரிக்ஸ் இயங்குமுறையின் கீழ் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியாவிற்கான சீனாவின் தூதர் சூ ஃபெய்ஹோங்கும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
