கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து, வெள்ளலூர் பழைய தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கி மழைநீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து, ஆற்றின் இரு கரைகளை தொட்டவாறு மழை நீர் செல்கிறது. இதனால் கோவை வெள்ளலூர் – சிங்காநல்லூர் பகுதியை இணைக்கும் தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கி, ஆற்று நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
வழக்கமாக மழைக்காலங்களில் இந்த தரைப்பால் நீரில் மூழ்கும் போது போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டு, சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கட்டப்பட்ட உயர் தரைப் பாலத்தால் இந்த ஆண்டு கடுமையான மழை பெய்தும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் வெள்ளலூர் பழைய தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கி தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் நீரில் இறங்கவோ மீன் பிடிக்கவோ செல்லக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.