அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் மோதல் போக்கில், தற்போது ஈரான் வழங்கியுள்ள புதிய சமரசத் திட்டம் மற்றும் அதற்கு அதிபர் டிரம்ப் அளித்துள்ள பதில் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அதாவது நிரந்தரப் போர் நிறுத்தத்தை நோக்கமாகக் கொண்டு, பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவிற்கு ஈரான் 14 முக்கிய நிபந்தனைகளை உள்ளடக்கிய சமரசத் திட்டத்தை அனுப்பியுள்ளது.
அதன்படி ஈரான் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் முக்கியமானவை, லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். கடற்படை முற்றுகையை நீக்கி, அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற வேண்டும். ஹார்முஸ் ஜலசந்திக்கு புதிய நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும்.
ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கி, முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும். கடந்தகால இழப்புகளுக்கு ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற 30 நாட்கள் காலக்கெடுவையும் ஈரான் விதித்துள்ளது.
ஆரம்பத்தில் இந்தத் திட்டத்தை நிராகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது அதை ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 47 ஆண்டுகளில் மனிதகுலத்திற்கு எதிராக ஈரான் செய்த கொடுமைகளுக்கு அவர்கள் இன்னும் போதிய விலையைக் கொடுக்கவில்லை. எனவே, இந்த ஒப்பந்தம் திருப்திகரமாக இருக்கும் என்று என்னால் கற்பனை செய்யக்கூட முடியவில்லை எனக் கூறி அதிரடி காட்டியுள்ளார்.
அமெரிக்கா தற்போது “போர் அல்லது ஒப்பந்தம்” ஆகிய இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளதால், அமெரிக்காவின் முடிவெடுக்கும் திறன் குறைந்துவிட்டதாகவும் ஈரான் கடுமையாகச் சாடியுள்ளது. மேலும் இந்த அதிரடித் திருப்பங்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.
