சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்து, தனது பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து தவித்து வருகிறது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, அரைசதம் கூட யாரும் அடிக்காத நிலையிலும் டெவால்ட் பிரெவிஸின் 44 ரன்கள் உதவியுடன் 180 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி, இஷான் கிஷனின் அதிரடி 70 ரன்கள் மற்றும் கிளாஸனின் 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் உதவியோடு 19 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டிப் பிடித்தது.
சிஎஸ்கே அணியின் இந்த மோசமான தோல்வி சென்னை ரசிகர்களைப் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியிருந்தாலும், அந்த அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் செய்துள்ள புதிய உலகத்தரம் வாய்ந்த சாதனை ரசிகர்களுக்குச் சிறிய ஆறுதலைத் தந்துள்ளது.
நடப்பு சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 477 ரன்கள் குவித்துள்ள சஞ்சு சாம்சன், ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்த சிஎஸ்கே விக்கெட் கீப்பர் என்ற எம்.எஸ்.தோனியின் 13 ஆண்டு கால சாதனையை (2013-ல் தோனி எடுத்த 461 ரன்கள்) மிகக் குறைந்த இன்னிங்ஸ்களிலேயே முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
