CBSE தேர்வில் குளறுபடி..! “இது என்னோட கையெழுத்தே இல்ல”… நான் எழுதிய விடைத்தாள் எப்படி மாறிச்சு..? ஆதாரத்தை வெளியிட்டு பிளஸ் 2 மாணவர் கண்ணீர்..! 

Estimated read time 1 min read

சிபிஎஸ்இ பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யும் பணியில் குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறி, மாணவர் ஒருவர் பதிவிட்ட சமூக ஊடகப் பதிவு தற்பொழுது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது இயற்பியல் விடைத்தாளுக்குப் பதிலாக வேறு ஒருவரின் விடைத்தாள் தனது ரோல் எண்ணில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த மாணவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, எதிர்பார்த்ததை விடக் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்காக விடைத்தாள் நகல் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீடு செய்யும் செயல்முறையை சிபிஎஸ்இ அண்மையில் தொடங்கியது. இதில், நடப்பு ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ‘திரைவழி மதிப்பீட்டு முறை’ மீது ஏற்கனவே பல மாணவர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் தனது ‘X’ பக்கத்தில் வெளியிட்ட பதிவு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவர் தனது பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, “நான் சிபிஎஸ்இ பிளஸ்-2 மாணவன். இயற்பியல் பாடத்தில் எனக்கு எதிர்பாராத விதமாக மிகக் குறைந்த மதிப்பெண்கள் கிடைத்தன. இதனால் மறுமதிப்பீட்டு நடைமுறை மூலம் எனது விடைத்தாளின் நகலைக் கோரி விண்ணப்பித்திருந்தேன்.

இன்று அந்த நகல் எனக்குக் கிடைத்தது. ஆனால், அதைப் பார்த்ததும் நான் உடைந்து போய்விட்டேன். ஏனெனில், சிபிஎஸ்இ இணையதளத்தில் எனது ரோல் எண்ணின் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இயற்பியல் விடைத்தாள் என்னுடையதே அல்ல. தொடர்ந்து தனது குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக, தனது ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியல் பாட விடைத்தாள்களின் நகல்களையும், தனது கையெழுத்துப் பிரதிகளையும் ஒப்பிட்டுப் பகிர்ந்துள்ளார்.

இயற்பியல் விடைத்தாளில் உள்ள கையெழுத்து என்னுடையது அல்ல என்பதை நானும், எனது குடும்பத்தினரும், ஆசிரியர்களும் பார்த்தவுடனேயே கண்டறிந்துவிட்டோம். ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியல் தாள்களில் உள்ள கையெழுத்துகள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகின்றன. ஆனால் இயற்பியல் தாள் முற்றிலும் வேறொரு மாணவருடையது போல் உள்ளது. எழுத்துகளின் வடிவம், இடைவெளி, சாய்வுத்தன்மை என அனைத்தும் வேறுபடுகின்றன. இது சிறிய குறைபாடு அல்ல, ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டுள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ-யின் புதிய ஆன்லைன் மதிப்பீட்டு முறையின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விடைத்தாள்கள் மாறிப் பதிவேற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் அம்மாணவர், “அப்படியானால் எனது உண்மையான விடைத்தாள் எங்கே போனது? யாருடைய பேப்பர் எனக்கு திருத்தப்பட்டது? இது வெறும் மதிப்பெண் குறைபாடு அல்ல, மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் விடைத்தாள் பரிமாற்றக் குளறுபடி” என்று சாடியுள்ளார்.

மேலும், ஒரு வருடம் முழுவதும் தூக்கம், நிம்மதி அனைத்தையும் தியாகம் செய்து படித்த தனக்கு இப்படி ஒரு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ள அவர், சிபிஎஸ்இ நிர்வாகம் உடனடியாக இதன் அசல் விடைத்தாளை ஆய்வு செய்து அவசர விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author