இந்த ஆண்டு சராசரிக்கும் குறைவான தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வறட்சி, விவசாய உற்பத்தியின்மை, உணவு பொருட்களின் விலைஏற்றம் என கடுமையான பாதிப்புக்கள் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சுமார் 4 ட்ரில்லியன் டாலருடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியாவுக்குப் பருவமழையே உயிர்நாடியாக விளங்குகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, இயல்பை விட அதிகமான மழை பெய்ததால் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிய விவசாயிகள் அடுத்தடுத்து நல்ல விளைச்சலைப் பெற்றனர். ஆனால் இந்த ஆண்டு அப்படி இருக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
2021-ம் ஆண்டு முதல், நாடு முழுவதும் மழைப்பொழிவு, வெப்பநிலை ஆகியவை தொடர்பான முன்னறிவிப்புகளை மாதாந்திர, பருவகால அடிப்படையில் வெளியிடுவதற்கு நவீன தொழில்நுட்பத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் பயன்படுத்தி வருகிறது.
கடந்த ஏப்ரல் 13ம் தேதி இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலத்தின் முதல் கட்ட கணிப்பை வெளியிட்ட இந்திய வானிலை ஆய்வு மையம், இரண்டாம் கட்ட முன்னறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன் படி தென்மேற்குப் பருவமழைக் காலத்தின் மழைப்பொழிவு 4 சதவீத ஏற்றஇறக்கம் அடிப்படையில், நீண்ட கால சராசரியில், 90 சதவீதமாக ஆக இருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப் பட்டுள்ளது.
1971-2020-ம் ஆண்டு வரையிலான தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதற்குமான தென்மேற்குப் பருவமழைக் கால மழைப்பொழிவின் நீண்ட கால சராசரி 87 சென்டி மீட்டர் ஆகும்.
இந்த ஜூன் மாதத்தில் மட்டும் நாடு முழுவதற்குமான சராசரி மழைப்பொழிவு நீண்ட கால சராசரியில் 92 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பசிபிக் பெருங்கடலின் மத்திய நிலநடுப்பகுதி வழக்கத்தை விட 2 டிகிரி செல்சியஸ்-க்கும் அதிகமாக வெப்பமடைந்து வருவதால், இந்த ஆண்டு ‘எல் நினோ’ உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
1951 மற்றும் 2022-க்கு இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட 17 எல் நினோ நிகழ்வுகளில், ஐந்து நிகழ்வுகள் பசிபிக் பெருங்கடலில் வெப்பமயமாதல் ஏற்பட்டபோதிலும், இந்தியாவிற்கு இயல்பான அல்லது இயல்பை விட அதிகமான மழையைக் கொண்டு வந்தன.
என்றாலும் இந்த ஆண்டு அதேபோல் ஒரு வாய்ப்பு இருக்குமா என்பது தெரியவில்லை. எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் வெப்பநிலை இயல்பை விட உயரும்போது ஏற்படும் ஒரு வானிலை நிகழ்வாகும். கடந்த காலங்களில், பெரும்பாலான எல் நினோ ஆண்டுகளில் இந்தியாவில் சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவே ஏற்பட்டுள்ளது.
இது சில சமயங்களில் கடுமையான வறட்சிக்கு வழிவகுத்து, பயிர்களை அழித்ததுடன்,உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைப் பாதித்துள்ளது.
ஆனால், பருவமழைக் காலத்தின் பிற்பகுதியில், சாதகமான இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) நிலைமைகள் உருவாக வாய்ப்புள்ளது என்றும் அது பருவமழைக்கு வழி வகுக்கும் என்றும் வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கிய நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்று மத்திய அரசு கணித்துள்ளது.
குறைவான மழைப்பொழிவு என்ற முன்னறிவிப்பு இந்த நிதியாண்டில் சில்லறை பணவீக்க அபாயங்களை ஏற்படுத்தியுள்ளன.
எல்நினோ மற்றும் சராசரிக்கும் குறைவான மழைப் பொழிவால் ஏற்படக் கூடிய சவால்களை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் முன்னெச்சரிக்கை மற்றும் அவசரகால திட்டங்களை வகுத்துள்ள மத்திய அரசு சாகுபடிக்குத் தேவையான விதைகள் மற்றும் உரங்கள் போதிய அளவில் சேமிப்பில் வைத்துள்ளது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
