திறந்தே கிடக்கும் வீடு.

Estimated read time 1 min read

Web team

IMG_20240401_112627_907.jpg

திறந்தே கிடக்கும் வீடு !

நூல் ஆசிரியர் கவிஞர் சி .பன்னீர் செல்வம் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மக்கள் கண்காணிப்பகம் ,6. வல்லபாய் சாலை ,சொக்கிகுளம் ,மதுரை 625002. விலை ரூபாய் 50.மின் அஞ்சல்info@pwtn.org
தொலைபேசி 0452- 2539520.

நூல் ஆசிரியர் கவிஞர் சி .பன்னீர் செல்வம் அவர்கள் இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் வென்றவர் . முனைவர் இ .தேவசகாயம் அவர்களின் பதிப்புரை நன்று .

மனதில் பட்டதை கவிதையாக வடிக்கும் ஆற்றலும் , துணிவும் பெற்றவர் .சமரசத்திற்கு இடமின்றி ரௌத்திரம் பழகி கவிதை வடிப்பவர் .உலகமயம் ,தாராளமயம் ,புதிய பொருளாதாரம் என்ற பெயரில் நாட்டை சீர்குலைத்து ,நதிகளை மாசு படுத்திய அவலத்தை பல்வேறு கவிதைகளில் சுட்டி உள்ளார் .

நதிகளைக் கழுவுதல் !

துர்நாற்றம் வீசும் கூவமா !
கூவத்துடன் போட்டியிடும் வைகையா
வணிகத்துக்குப் பலியான நொய்யலா
கங்கை காவிரி யமுனையா
மனிதக் கழிவுகள் சுமக்கும்
பிற நதிகளா ?

படைப்பாளிக்கு சமுகத்தின் மீது அக்கறை வேண்டும் என்பார் மாமனிதர் தி .க .சி . அவர்கள் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .பன்னீர் செல்வம்அவர்கள் சமுகத்தின் மீது அக்கறை உள்ளவர் .ஆனால் சில எழுத்து வியாபாரிகள் பச்சையும் கொச்சையும் எழுதி பணம் சேர்த்து வருகின்றனர் .அவர்களைச் சாடும் விதமாக உள்ள கவிதை நன்று .
.
விடுதலை !

விரசங்களையே விதம் விதமாக
வாந்திஎடுத்துப் பணம் பண்ணும்
காகித விபச்சாரம் இன்னும்
கொடி கட்டித்தான் பறக்கிறது …

நீதிமன்றங்களில் நீதி ஏழைகளுக்கு தாமதமாகவே கிடைக்கின்றது.தாமதமான நீதியும் அநீதிதான் .அதனை உணர்த்தும் கவிதை ஒன்று .

அகலிகை – கண்ணகி -பாவ விமோசனம் !

காலம் காலமாக நீதி தேவதைகள்
கண்களைக் கட்டியபடி நிற்கிறார்கள்
ஒற்றை மார்பரிந்த கண்ணகி
ஒற்றைக்கால் சிலம்புடன்
சிலையாக !

பெற்றோர்களிடம் ,துணையிடம் பகிர்ந்து கொள்ள முடியாததையும் தோழமையிடம் நட்பிடம் பகிர்ந்து கொள்ள முடியும் .நட்பின் மேன்மை விளக்கும் கவிதை நன்று .

நல்ல நண்பன் !

நல்ல நண்பன்
ஒவ்வொருவரும்
ஆயிரம் கரங்களுக்குச் சமம்
வறுமை வளமை
இன்பம் துன்பம் யாவினும்
இளமை முதல் முதுமை முடிய
அவர்களே வழிகாட்டி !

மனசாட்சி உள்ள ,மனிதாபிமானமுள்ள படைப்பாளிகள் யாவருமே ஈழத்தில் நடந்த தமிழ் இனப்படுகொலைகளைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது .நூல் ஆசிரியர் கவிஞர் சி .பன்னீர் செல்வம்
அவர்களும் ஈழக் கொடுமைகள் பற்றி எழுதி உள்ளார் பாருங்கள். ஒவ்வொரு கவிதையும் பெரிய கவிதைகள்தான் .நான் சுருக்கி முக்கிய வரிகள் மட்டும் எழுதி உள்ளேன் .

இன்றோ !

ஒரு குட்டித் தீவே வதைமுகாமாகி
ஓர் இனத்தையே நிர்முலமாக்க
தனது போதி சத்துவத்தையே
கழுவேற்றிக் கொண்டிருக்கிறது !

இட்லரையே சாப்பிட்டு ஏப்பம் விட்ட
இந்நூற்றாண்டின் மாபெரும் கொலையாளி
கொன்று குவிக்கத் தமிழன் தீர்ந்து போனதால்
போர் முடிந்து விட்டதென அறிவிக்கின்றான் !

முட்டையில் மயிர் பிடுங்கிக் கொண்டிருக்கிறது
சர்வதேசச் சமூகம் !

கோபம் தீங்கு என்பார்கள் .ஆனால் நூல் ஆசிரியர் கவிஞர் சி .பன்னீர் செல்வம் அவர்கள் நீதி வேண்டி நியாயம் வேண்டி கோபம் கொள்வது நியாயம் என்கிறார் .

சினம் கொளாமை !

கொலை கொள்ளை கற்பழிப்பும்
சாதிமத இன ஒடுக்கல்களும்
பசி வறுமைக் கண்ணீரும்
பெருக்கெடுத்தோடும் பூமியில்
சினம் கொளாமை
பேரவலம் அன்றோ !

ஆற்றின் கரையோரம் நாகரிகம் தோன்றியது என்பார்கள் .ஆனால் இன்று நாகரிகத்தின் காரணமாக மூட நம்பிக்கை காரணமாக ஆறுகள் மாசாகி விட்டன .அந்த அவலம் சுட்டும் கவிதை .

பாழ் !

ஆறில்லா ஊர் பாழென
என்றோ சொன்னால் அவ்வை !

ஆறிருந்தும் ஊர் பாழென
இன்றைய
இந்திய வாழ்வு கூறுகிறது !

வடபுலத்து நதிகளில்
பிணங்களும் மனிதக் கழிவுகளும்
மிதந்து செல்கையில்
புனித நீராடுகிறார்கள் !

தென்புலத்தின்
நதிகளுக்கான யுத்தம்
தொடர்கதையானது !

பெரியாறும் காவிரியும்
கனவு நதியாகிக்
காத்திருக்கின்றன !

.மனித நேயத்தோடு கொடுமைகள் கண்டு கொதிக்கும் மனிதராக .மனசாட்சி உள்ள அற்புத மனிதராக உண்மையான நேர்மையான படைப்பாளியாக இருக்கும் நூல் ஆசிரியர் கவிஞர்
சி .பன்னீர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .இந்த நூலை வெளியிட்ட மக்கள் கண்காணிப்பகத்திற்கும்
பாராட்டுக்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author