12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

Estimated read time 1 min read

பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா வெறும் வளர்ச்சியைப் பற்றி மட்டும் பேசவில்லை. கடந்த 12 ஆண்டுகளில், பல அதிரடி கொள்கை மாற்ற முடிவுகளைப் பிரதமர் மோடி நடைமுறைக்குக் கொண்டுவந்து தேசத்தை முன்னேற்றி வருகிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 4,398 நாட்கள் என்ற சாதனையைப் பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமரான பிரதமர் மோடி, அப்பதவியில் 4,399 நாட்கள் தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

2014-ல் முதல்முறையாக பிரதமரான மோடியின் முதல் ஆட்சிக்காலத்தில் இந்தியாவை பொருளாதார சூப்பர் பவராக்குவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. 2019-ல் பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிகாலத்தில் அனைவரையும் உள்ளட்டக்கிய கொள்கையுடன் காஷ்மீருக்கான 370வது சட்டப் பிரிவு நீக்கம் எனப் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப் பட்டன.

2024-ல் தொடங்கிய பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சியில் 2047-ல் வளர்ந்த பாரதம் என்று குறிக்கோளுடன் செயல் திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் 12 முக்கிய கொள்கை முடிவுகள் நாட்டின் தலையெழுத்தையே மாற்றி இருக்கின்றன.

2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மாலை, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று துணிச்சலாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார் பிரதமர் மோடி. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை நோக்கி நாடு வேகமாக நகர்வதற்கு இந்த முடிவே அடித்தளத்தை அமைத்தது.

2016-ல் பிரதமர் மோடி வளர்த்தெடுத்த நாட்டின் ஸ்டார்ட்அப் சூழலமைப்பு உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் சூழலமைப்புகளில் முதன்மையாக திகழ்கிறது.

2017-ஆம் ஆண்டு ஜூலையில் கொண்டுவரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி என்ற GST வரி சட்டம், நாட்டில் தேசிய சந்தையை உருவாக்கியது.

2018-ல் பிரதமர் மோடியின் அரசு கொண்டுவந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் உலகின் மிகப்பெரிய பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இது குறைந்த வருமானம் கொண்ட லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு சுகாதார சேவைகளைத் தருகிறது.

மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் போன்ற திட்டங்கள் உற்பத்தி மற்றும் தன்னிறைவு என நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

மேலும் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில், பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த சீர்திருத்தமான,மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்குகிறது.

2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப் பிரிவை பிரதமர் மோடியின் அரசு ரத்து செய்தது. இது ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் முழுமையாக ஒருங்கிணைத்தது.

2019-ல், முத்தலாக்கைக் குற்றமாக்கும் சட்டத்தைப் பிரதமர் மோடி கொண்டுவந்தார். இது முஸ்லிம் பெண்களுக்கு தன்னிச்சையான விவாகரத்து நடைமுறைகளுக்கு எதிராக சட்டப் பாதுகாப்பை வழங்கியுள்ளது.

2016-ல் நடந்த உரி பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அப்பால் இருந்த பயங்கரவாதத் தளங்கள் மீது இந்தியா surgical strikes செய்தது. 2019-ல் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, பாலகோட்டில் இருந்த பயங்கரவாதக் கட்டமைப்புகள் மீது அதிரடி தாக்குதல்கள் நடத்தப்பட்டது. 2025-ல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக பாயாது என்று நிலைப்பாட்டை உறுதியாக பிரதமர் மோடி எடுத்தார்.

2016-ல் அறிமுகப்படுத்தப்பட்ட UPI, இன்று இந்தியாவின் சில்லறை வர்த்தகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வளர்ந்துள்ளது. 2025-26 நிதியாண்டிற்குள், இது 200 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைக் கையாண்டுள்ளது.

குறிப்பாக ஜன் தன்-ஆதார்-மொபைல் கட்டமைப்பு, அரசின் நலத்திட்ட உதவிகள் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக மக்களைச் சென்றடையும் புதிய நெறிமுறையாக அமைந்தது.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, 2024-ஆம் ஆண்டு ஜனவரியில் அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் உலகிற்குத் தலைமை தாங்குவது முதல், முக்கிய உற்பத்தி மையமாக திகழ்வது வரை, அனைத்து துறைகளிலும் புதிய அளவுகோல்களை அமைத்து, விஷ்வ குருவாக நிமிர்ந்து நிற்கிறது.

You May Also Like

More From Author