ஞாபக நடவுகள்

Estimated read time 1 min read

Web team

kavingar_ravi.jpg

ஞாபக நடவுகள்
நூலாசிரியர் : கவிஞர் கூ.ரா. அம்மாசையப்பன் 97900 01558
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
ஓவியா பதிப்பகம், 17-16-5A, கே.கே. நகர், வத்தலக்குண்டு, விலை : ரூ. 70
amsakiruba@gmail.com, vathilaipraba@gmail.com
*****
அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நன்று. ஓவியா பதிப்பகத்தின் தரமான பதிப்பகத்தின் தரமாக பதிப்பாக வந்துள்ளது. இனிய நண்பர் வதிலைபிரபா அவர்களின் பதிப்புரை நன்று. முனைவர் வல்லவன் அவர்கள் வாழ்த்துரையை புதுக்கவிதையாகவே வழங்கி உள்ளார் திரு. சு. சண்முகம் தலைமையாசிரியர் அணிந்துரை மிக நன்று.

கவிதை என்பது படிக்கும் வாசகர்களுக்கும் எழுதிய கவிஞர் உணர்ந்த உணர்வை உணர்த்துவதாக இருக்க வேண்டும். நூலாசிரியர் கூ.ரா. அம்மாசையப்பன் அவர்கள் சமுதாயத்தை கூர்ந்து நோக்கி உணர்ந்தவற்றை உள்ளத்தில் உள்ளது கவிதை என்று மனதில் பட்டதை கவிதையாக வடித்து நூலாக்கி உள்ளார்கள். பாராட்டுக்கள். நூலை காணிக்கையாக்கிய விதத்திலேயே வித்தியாசப்படுகிறார்.

“சிதறிக்கிடந்த சிந்தனைகளை சேகரிக்கத் தூண்டிய மனைவிக்கும், சேமிக்க உதவிய சிறு இடைவெளிக்கும்” என்று காணிக்கையாக்கி உள்ளார்.

கண்மாய், ஏரி, குளம் அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்து விட்டு இன்று குடிநீருக்கு அல்லல்பட்டு வருகிறோம். அதனை உணர்த்திடும் கவிதை நன்று.

ஆக்கிரமிப்பு

அன்று / ஊருக்குள் ஏரி / செழித்தது நீரால்
இன்று / ஏரிக்குள் ஊர் / மிதிக்குது நீரால்
வரைமுறை இன்றி / வளைத்துப் போட்டதால்
தலைமுறை தாண்டியும் / தண்டிக்கப்படுகிறார்கள்
மக்கள் / தண்ணீராலும் / தண்ணீருக்காகவும்…

நதிநீர் இணைப்பு என்பது நல்ல திட்டம். மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்கள். புதிதாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ளவர்கள். நிறைவேற்ற முன் வர வேண்டும். நிறைவேற்றினால் நாடு செழிக்கும்.

இணையட்டும் இந்தியா!

இருப்பு பாதைகளால் / இந்தியாவை இணைத்தோம்
தேசிய சாலைகளால் / தேசத்தை இணைத்தோம்
தண்ணீரால் இணைத்து / எங்கள்
கண்ணீர் துடைக்க மட்டும்
காலதாமதம் ஆவது ஏன்?
கண்ணீரோடு காத்திருக்கிறான் / தண்ணீரின்றி துடிக்கும் தமிழன்.

காதல் கவிதை எழுதித் தான் முதலில் கவிஞன் தன் பாதையை தொடங்குகின்றான். நூலாசிரியர் கவிஞர் அம்மாசையப்பன் அவர்களும் காதல் கவிதைகள் எழுதி உள்ளார்.

மனசு

நீ கடந்து போகும் / ஒவ்வொரு முறையும்
உடைந்து போகிறது / என் மனது / கண்ணடியாய்.

பெண் குழந்தை பாசம் மிக்கது நேசம் மிக்கது.

பெண் பெற்று வளர்த்த பெற்றோர்கள் அனைவரும் உணர்ந்த ஒன்று. ஆனாலும் சிலர் கருவிலேயே கண்டுபிடித்து பெண் என்றால் கதை முடிக்கும் அவலத்தை அரங்கேற்றி வருகின்றனர். அவர்களுக்கான கவிதை.

ஸ்கேன்

உள்ளே இருப்பதை / ஊடுருவிப் பார்க்கவா…!
உயிரைப் பறிக்கவா….?

காந்தியடிகள் படத்தை பணத்தில் அச்சிட்டு மரியாதை செய்தனர். ஆனால் மதுவை ஒழிக்கச்சொன்ன காந்தியடிகள் படம் அச்சிட்ட பணம் கொடுத்து மது வாங்குகின்றனர். அஞ்சல்தலையிலும் காந்தியடிகள் படம் உள்ளது. எள்ளல் சுவையுடன் கவிதை வடித்துள்ளார்.

மகாத்மா!

அன்றாடம் / அடிபடுகிறார் / அண்ணல் காந்தி
அன்று / ஆங்கிலேயரிடம் / இன்று – அஞ்சல்காரரிடம்.

தினசரி செய்தித்தாளில் விபத்து என்று செய்தி வந்து கொண்டே இருக்கின்றன. கவனமின்மையும் மது அருந்தி வாகனம் ஓட்டுதலும் போட்டி மனப்பான்மையும் காரணமாகின்றன.

சாலைகள்

பயணத்துக்கு / மட்டுமே / பந்தயத்துக்கு அல்ல

ஆள்வோர்கள் சரியாகத் திட்டமிடாத காரணத்தால் உலக வங்கியிடம் வட்டிக்கு கடன் வாங்கி கடன் சுமையை நாளுக்கு நாள் ஏற்றி வருகின்றனர். அதனை உணர்த்திடும் கவிதை ஒன்று.

இந்தியா

அன்று / மூன்று பக்கமும் / கடலால் சூழப்பட்டநாடு
இன்று / நான்கு பக்கமும் / கடனால்.

மனிதாபிமானமுள்ள மனிதர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத கொடூரம் இலங்கையில் நடந்தது. லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்த பின்னும் சுதந்திரமாக உலகை வலம் வருகின்றான். ஈழக் கொடுமைக்காக குரல் கொடுத்தவர்கள் தான் உண்மையான படைப்பாளிகள். அந்த வகையில் குரல் கொடுத்துள்ளார் நூலாசிரியர்.

எங்கே அனுமன்?

அன்று / ஒற்றைச் சீதையை / சிறை மீட்க
அசோகவனத்தையே / அக்னிக்கு இரையாக்கி
அழித்த அனுமனே

இன்று / நித்தம் நித்தம் / கொத்துக் கொத்தாய்
செத்து மடியும் / ஈழத்து சோதரிகளின்
அபயக்குரல் உன் / செவிகளில் விழவில்லையா?

ஆன்மிகவாதிகளையும் சிந்திக்க வைக்கும் கவிதையாக உள்ளது.

முத்தாய்ப்பாக தன்னம்பிக்கை விதைக்கும் விதமான கவிதை மிக நன்று. பாராடடுக்கள்.

முயற்சி!

கவலையை மற! காற்றென பற!
நிலமென பொறு / நெருப்பாய் எரி / நீராய் தெளி
தடைகளை உடை / தாகம் தவிர் / சிறகை விரி
சீக்கிரம் விழி / வியர்வை பொழி / வெற்றியே வழி

நூலாசிரியர் கவிஞர் கூ.ரா. அம்மாசையப்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

.

Please follow and like us:

You May Also Like

More From Author