ஹஜ் பயணிகள் கவனத்திற்கு! ஜூலை 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் – அமைச்சர் ஷாஜகான்..!

Estimated read time 1 min read

சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”2027ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மற்றும் மானியம் தொடர்பாக மும்பை ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் 2027ஆம் ஆண்டு ஹஜ் கமிட்டி மூலமாக பயணம் செல்ல விரும்பும் பயணிகள், தங்களுடைய விண்ணப்பங்களை உடனடியாக ஜூலை 20ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அவர்கள் முதல் தவணைத்தொகையாக ரூ.1,52,300 செலுத்துவதற்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு ஹஜ் பயணிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.15 கோடிக்கும் அதிகமாக மானியம் வழங்கியது. அதேபோல் இந்த ஆண்டும் மானியம் வழங்கப்படும். மேலும் எதிர்காலத்தில் இந்த மானியத் தொகையை மேலும் உயர்த்தி வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

சென்னை, நங்கநல்லூரில் சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஹஜ் இல்லப் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என கூறினார். உலமாக்கள் மானியத் தொகை குறித்து பேசிய அமைச்சர் ஷாஜகான், “உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானியம், மசூதிகளில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்காக வழங்கப்படும் மானியத் தொகை ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மானியத்தைப் பெற விரும்புவோர், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 30ஆம் தேதி, அதற்கு தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்” என்றார். வக்ஃபு சொத்துக்கள் பதிவேற்றம் குறித்து பேசுகையில், “புதிய வக்ஃபு திருத்தச் சட்டத்தின் கீழ், வக்ஃபு சொத்துக்களை உமீத் (Umeed) இணையதளத்தில் பதிவேற்ற கடந்த டிசம்பர் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பின்னர், வக்ஃபு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் 6 மாத கால அவகாசம் பெறப்பட்டது.

அதன்மூலம், தற்போது 95 சதவீதத்திற்கும் அதிகமான வக்ஃபு சொத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் முறையான ஆவணங்கள் இல்லாமல் விடுபட்ட, பதிவேற்றம் செய்யப்படாத சொத்துக்களுக்கு, கூடுதல் அவகாசம் கோரி உயர்நீதிமன்றத்தை அணுக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக வாடகை மற்றும் குத்தகை தொடர்பான பிரச்சனைகளால் ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்டெடுக்க வக்ஃபு வாரியமும், தமிழ்நாடு அரசும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அமைச்சர் ஷாஜகான், ”நான் தேசிய புலனாய்வு முகமை (NIA) கண்காணிப்பில் இருப்பதாக வெளியிடப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை, அவை திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு செய்திகள். பல்லாண்டுகளாக சிறையில் உள்ள கைதிகளை அவர்களின் நன்னடத்தை அடிப்படையில், கருணை மனு மூலம் நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் தாமதம் ஏற்படும் பட்சத்தில், முந்தைய அரசின் நடைமுறையைப் போன்று, ஃபர்லோ விதிகளின் கீழ் இரண்டு மாதங்களுக்கு பிணையில் விடுதலை வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

You May Also Like

More From Author