தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, இரு மாநில அரசு நிர்வாகங்களைக் கவனிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் மாநிலங்களின் தற்போதைய நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்த பின்னர் எதிர்க்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பதவி விலகுவது குறித்தும், இதில் குதிரை பேரம் நடைபெற்றுள்ளதாக புகார் வருவதும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், தமிழகத்தில் பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர்கள் நியமனம் செய்வதற்கு அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் துணைவேந்தர் நியமனம் குறித்தும், பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் இந்த ஆலோசனையில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் தமிழ்நாடு அரசு, சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான ஊழல் வழக்குகள் மீது விசாரணை மேற்கொள்ள ஆளுநரிடம் அனுமதி கேட்டிருந்தது. அது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு போன்ற விவகாரங்கள் குறித்தும் இருவரும் கலந்தாலோசித்ததாக கூறப்படுகிறது.
