காரில் தொங்கிட்டு போனா இனி கார் பறிமுதல்! கொடைக்கானல் போற இளைஞர்களுக்கு எஸ்பி அதிரடி எச்சரிக்கை!

Estimated read time 1 min read

கொடைக்கானலுக்கு வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறை உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பயணிகளில் சில இளைஞர்கள், சமூக வலைதள ரீல்ஸ்கள் மற்றும் விளம்பர மோகத்திற்காகத் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், ஓடும் காரின் மேற்கூரை (Sunroof) மற்றும் ஜன்னல் கதவுகளில் ஆபத்தான முறையில் தொங்கியபடி சாகசப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். செங்குத்தான மலைச்சாலையில் அரங்கேறும் இந்த அத்துமீறல்களால் பல நேரங்களில் கட்டுப்பாட்டை இழந்து கொடூர விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரிடுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த ஆபத்தான கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் இன்று அதிரடி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கொடைக்கானல் மலைச்சாலையில் பொதுமக்களுக்கும், மற்ற வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கார்களின் மீது அமர்ந்தோ அல்லது ஜன்னல்களில் தொங்கியபடி சாகசப் பயணம் மேற்கொள்ளவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை மீறி செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் (Motor Vehicles Act) கடுமையான வழக்குப் பதிவு செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட வாகனங்களும் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்” என அதிரடியாக எச்சரித்துள்ளார். மேலும், வத்தலக்குண்டு முதல் கொடைக்கானல் வரையிலான மலைச்சாலையில் உள்ள முக்கியக் கொண்டைஊசி வளைவுகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு ஸ்பாட் ஃபைன் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போக்குவரத்துப் போலீசாருக்கு எஸ்பி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

You May Also Like

More From Author