தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கு புதியதாக 4 கிலோ வாட் மின்சாரம் இணைப்புக் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஆக.28- ஆம் தேதி முதல் நேரடி கள ஆய்வு இல்லாமல் மின் இணைப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில், புதிய மின் இணைப்புக் கோரும் ஒருமுனை வீட்டு மின் இணைப்பு (நீட்டிப்பு அல்லது மேம்பாட்டு பணி எதுவும் தேவைப்படாத இணைப்புகள் மட்டும்) விண்ணப்பதாரர்களுக்கு, கள ஆய்வு இல்லாமலேயே சுய உறுதிமொழி (Self-Declaration) அடிப்படையில் புதிய மின் இணைப்பு வழங்கப்படும். இதன்மூலம் புதிய மின் இணைப்பு கோரும் வீட்டு விண்ணப்பத்தாரர்களுக்கு செயல்முறை எளிதாக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் 4 கிலோ வாட் வரை உள்ள புதிய வீட்டு மின் இணைப்புகளுக்கு விரிவாக்கம் அல்லது மேம்பாட்டுப் பணிகள் தேவையில்லாத நிலையில், இனி கள ஆய்வு இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் புதிய நடைமுறை வரும் ஆக.28-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து தலைமைப் பொறியாளா்கள், மேற்பாா்வைப் பொறியாளா்களுக்கு தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் அனுப்பியுள்ள கடிதத்தில், “ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களுடன், மின் இணைப்பு வழங்க வேண்டிய இடத்தின் ஜிபிஎஸ் இருப்பிடக் குறியீடுகளை விண்ணப்பதாரரே பதிவு செய்ய வேண்டும். ஆவணங்களின் அச்சு நகல்களை கட்டாயமாகச் சமா்ப்பிக்கக் கூடாது.
மேலும், விண்ணப்பதாரா் அளிக்கும் ஜிபிஎஸ் தகவல்கள் ஜிஐஎஸ் செயலி (GIS App) மூலம் சரிபாா்க்கப்படும். தகவல்கள் சரியாக இருந்தால் கள ஆய்வு இல்லாமல் விண்ணப்பம் அடுத்தக்கட்டத்துக்கு அனுப்பப்படும். சரிபார்க்கும்போது தவறுகள் கண்டறியப்பட்டால் வழக்கமான கள ஆய்வு நடைமுறை மேற்கொள்ளப்படும். ஜிபிஎஸ் சரிபாா்ப்பு முடிந்ததும், மதிப்பீடு செய்யப்பட்டு, மின் இணைப்பு வழங்கும் பணியின்போது மீட்டா் பொருத்தப்படும் இடத்தின் உண்மையான ஜிபிஎஸ் தகவலும் பதிவு செய்து சரிபாா்க்கப்படும். பின்னா் மீட்டா் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இணைப்பு வழங்கப்படும்.
மின்சாரம் வழங்குவதற்கு வீட்டில் மின்சார சாதனங்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் இல்லாவிட்டால், வீட்டின் உரிமையாளருக்கு மின் இணைப்பு வழங்க தயார் நிலையில் உள்ளதற்கான தகவல் மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். மேலும் மின் இணைப்பு வழங்குவதற்கான கருவிகளைப் பொருத்தி ஒரு மாதத்திற்குள் சரி செய்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படும். ஒரு மாதத்திற்குள் குறைபாடுகள் சரிசெய்து மின் இணைப்பு பெறாவிட்டால் விண்ணப்பம் காலாவதியானதாகக் கருதப்பட்டு ரத்துச் செய்யப்படும். மேலும் மின் இணைப்பு ரத்து செய்யும் நிலை வந்தால் மீட்டர் பாதுகாப்புக் கட்டணத்தை தவிர பிற கட்டணங்கள் திருப்பித் தரப்படாது.
சரிபார்ப்பு தோல்வியுற்றால், அந்த விண்ணப்பம் ஜிஎஸ்ஐ மொபைல் செயலியின் ஆய்வு பட்டியலில் சேர்க்கப்பட்டு, வழக்கமான விண்ணப்பமாகக் கருதப்பட்டு அதன் ஆய்வின் நிலைகளைப் பின்பற்றித் தொடரப்படும். விண்ணப்பத்தை ஆய்வு செய்தல் அல்லது மாற்றங்கள் குறித்த தகவல்கள் விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்படும். இந்தப் புதிய நடைமுறை ஆக.28 முதல் ஆன்லைனில் பதிவு செய்யப்படும்; புதிய நடைமுறை புதிய விண்ணப்பங்களுக்கு மட்டும் பொருந்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர் கூறுகையில், “தமிழ்நாட்டில் விண்ணப்பம் செய்த 24 மணி நேரத்திற்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. ஆனால் விண்ணப்பம் செய்தப் பின்னர் வீட்டில் மின் இணைப்பு வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளதா? என்பதை வணிக ஆய்வாளர் நேரில் சென்று பார்வையிட்டு உறுதிச் செய்வார்.
அதனைத் தொடர்ந்து பீல்டுமேன் நேரில் சென்று மின் இணைப்பை பொருத்துவார். அப்போது மின் இணைப்பு எண் உள்ளிட்டவை வழங்கப்படும். ஆனால் எந்த வீட்டிலும் மின் இணைப்பு 24 மணி நேரத்தில் வழங்க முடிவதில்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஜிஎஸ்ஐ குறியீடு சரியாக காண்பிக்காவிட்டால் மின் இணைப்பு வழங்க முடியாத நிலை உருவாகும்” என்றார்.
