சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்த அறிவிப்புகள்..!

Estimated read time 1 min read

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக அதிகரிக்கப்படும் என அறிவித்தார். இந்த விலை உயர்வு மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியான இந்த அறிவிப்பு பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் அறிவித்துள்ளதற்கு பால்வளத்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்திருப்பது முக்கியமான நடவடிக்கை என அமைச்சர் குறிப்பிட்டார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், அவர்களின் நலனுக்கும் பெரும் பயனளிக்கும் என்றும் அமைச்சர் புகழ்ந்து பேசினார்.

இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில்,

திருச்சியில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம்

பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் (பல்முனை தளவாட மையம்) தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் அமைக்கப்படும். இதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் ஆய்வு மேற்கொண்டு, திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.

கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம்

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் (கோயம்புத்தூர் ஃபின்டெக் மையம்) 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். உலகத் தரத்திலான வசதிகள், அலுவலக இடங்கள், புத்தொழில் நிறுவனங்கள், நவீன ஆய்வகங்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற அதிநவீன வசதிகள் இம்மையத்தில் இடம்பெறும். உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும், நவீன தொழில் நுட்பங்களை ஊக்குவிக்கவும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.

மின் பகிர்மான கட்டமைப்பு (Distribution) மேம்பாட்டுப் பணிகள் 1,762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இதன்கீழ், 36 புதிய 33/11 கிலோ வோல்ட் துணை மின்நிலையங்கள் அமைத்தல், புதிய மின் பகிர்மான மின்மாற்றிகளை நிறுவுதல், சேதமடைந்த மற்றும் பயன்பாட்டுக் காலம் நிறைவடைந்த கேபிள்கள், மின்கடத்திகள், Pillar Box, Circuit Breakers உள்ளிட்ட உபகரணங்களை மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

காஞ்சியில் மின்னணு உற்பத்தி பூங்கா

காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில், குறைக்கடத்தி மற்றும் மின்னணு உற்பத்தி பூங்கா 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும். இதில் உலகத்தரம் வாய்ந்த, R & D – Research and Development வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் இத்துறையில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் ஈர்க்கப்படும். மேலும், சுமார் 5,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

196 புதிய துணை மின்நிலையங்கள் – விஜய் அறிவிப்பு

முதலமைச்சர் அறிவிக்கையில், “தமிழ்நாட்டில் 196 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும். 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின்பாதைகள் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மின்பாதைகள் வலுப்படுத்தப்படும். தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தமிழ்நாடு மின்பரிமாற்ற மேம்பாட்டுத் திட்டம்) மூலம் 33 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது” என தெரிவித்தார்.

மேலும், தூத்துக்குடியில் புதிய சூப்பர்கிரிட்டிகல் வெப்ப மின் நிலையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளுடன், மொத்தமாக 1,600 மெகாவாட் திறன் கொண்ட New Supercritical Thermal Power Station 20 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார்.

You May Also Like

More From Author