நடிகர் அஜித்குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப் படத்தின் ட்ரைலர் வெளியானது..!

Estimated read time 1 min read

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான நடிகர் அஜித்குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்பட சிறப்பு ட்ரெய்லர் குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து ஆர்வத்துடன் கண்டுகளித்த இந்நிகழ்வில், இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், ஆதிக் ரவிச்சந்திரன், சிறுத்தை சிவா ஆகியோர் நேரில் பங்கேற்று ரசிகர்களுடன் உற்சாகமாக ட்ரெய்லரைக் கண்டு ரசித்தனர்.இப்படத்தை அஜித்குமாரின் மனைவி ஷாலினியே தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய இயக்குநர் ஏ.எல்.விஜய் கார் பந்தயத்தை மையமாகக் கொண்ட இப்படம் நடிகர் அஜித்தின் நீண்ட நாள் கனவுத் திட்டம் என தெரிவித்துள்ளார். பந்தயக் களத்தின் உண்மையான தருணங்களை எவ்விதப் புனைவும் இன்றி நேரடியாகப் பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ள அவர், களத்தில் அஜித்தின் அசுர உழைப்பு பிரமிக்க வைத்ததாகவும், திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெய்லரைப் பார்த்தது புதுமையான அனுபவமாக அமைந்தது எனவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கனவு இருக்கும். சிறுவயதில் நாம் செய்யத் தவறிய அல்லது விட்டுச் சென்ற விஷயங்களைத் தேடி அலைவது தான் மனித வாழ்க்கை. இந்த ஆவணப்படமும் அதுபோன்ற ஒரு கதைக் களத்தைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

‎அஜித் குமாருக்கு மோட்டார் ரேஸ் மீதான ஆர்வம் நேற்று, இன்று வந்ததல்ல அது அவரது சிறுவயதுக் கனவு. நீண்டகாலமாக அவருக்குள் மறைந்திருந்த அந்தத் தீவிர ஆசை சமீபகாலமாகத்தான் வெளி உலகிற்குத் தெரியத் தொடங்கியுள்ளது” என்றார்.

இன்று வெளியான ட்ரெய்லரில், ‎அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, மனைவி ஷாலினி, மகள் அனக்ஷா, மகன் ஆத்விக் ஆகியோர் அஜித் குமாரின் ரேசிங் பற்றி அவரவர் பார்வையில் விவரிக்கிறார்கள். குறிப்பாக ஷாலினி பேசும்போது, “வெற்றி என்பது ஒரு இரவில் வராது; அதனை அஜித் எப்போதும் விரும்பவும் மாட்டார். ஒவ்வொரு முறை அஜித் கார் பந்தயத்தில் ஈடுபடும் பொழுதும் மனைவியாக எனக்கு மிகப் பெரிய அளவு பதைபதைப்பு இருக்கும். இருப்பினும் அவருடைய ஆசை, விருப்பம் என அனைத்தும் கார் பந்தயமாக இருப்பதால் அதற்கு நான் முழு ஒத்துழைப்பை தருகிறேன்” என தெரிவித்தார்.

You May Also Like

More From Author