ஆசிய கோப்பை: ஒரு கோல் கூட அடிக்கல…! 19-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய வீராங்கனைகள்…

Estimated read time 1 min read

சீனாவின் மோகி நகரில் நடைபெற்ற மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை முழு ஆதிக்கத்தையும் செலுத்திய இந்திய இளம் வீராங்கனைகள், பாகிஸ்தான் அணியை 19-0 என்ற கோல் கணக்கில் பந்தாடி அரையிறுதிச் சுற்றுக்கு அதிரடியாக முன்னேறியுள்ளனர்.

இந்தியா தொடக்கத்திலிருந்தே தனது கோல் வேட்டையைத் தொடங்கி மைதானத்தை அதிரவைத்தது. முதல் குவார்ட்டரில் 5 கோல்களையும், இரண்டாவது குவார்ட்டரில் 5 கோல்களையும், மூன்றாவது குவார்ட்டரில் 3 கோல்களையும், கடைசி குவார்ட்டரில் மேலும் 6 கோல்களையும் அடித்து மிரட்டினர்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய வீராங்கனைகள் தொடர் தாக்குதலைத் தொடுத்து மொத்தம் 19 கோல்களைக் குவித்தனர். மேலும், 18 பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும், 1 பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பையும் இந்தியா பெற்றது. மறுபுறம், பாகிஸ்தான் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை; குறைந்தபட்சம் ஒரு பெனால்டி கார்னர் அல்லது பெனால்டி ஸ்ட்ரோக்கைக் கூட அவர்களால் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டம் தொடங்கிய ஏழாவது நிமிடத்தில் இந்தியாவின் பூஜா சாகு முதல் கோலை அடித்து கணக்கைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ரோஷ்னி ஐந்த், தனுஷ்ரீ காடு, சுக்வீர் கவுர், சனிகா மானே, மது சிடார், கீதா யாதவ், தனுஜா டோப்போ, பூஜா மாலிக், பூர்ணிமா யாதவ், சுப்ரியா, கிருஷ்ணா சர்மா மற்றும் பினிமா தன் என அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தனர். குறிப்பாக, பூஜா இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

இந்த அட்டகாசமான வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் கொரியா மற்றும் மலேசியா அணிகளில் வெற்றி பெறும் அணியை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது.

You May Also Like

More From Author