காது கேளாத வாய்பேச இயலாதவர்களுக்கென உலகம் முழுவதும் செப்டம்பர் 23-ம் தேதி சர்வதேச சைகை மொழி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மனிதன் தன் தேவைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பயன்படுத்திய மொழி சைகை மொழி.
சைகை மொழி என்பது பலவிதமான கை அசைவுகள் மற்றும் முக பாவனைகள் மூலம் பேசப்படுகிறது.
உலகில் பல்வேறு மொழிகள் உள்ளதை போலவே சைகை மொழிகளிலும் இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை மொழி என பல வகைகள் உள்ளன.
காதுகேளாதோரின் உரிமைகளுக்காகவும் அவர்களின் நலனுக்காகவும் கடந்த 1951-ம் ஆண்டில், உலக காது கேளாதோர் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நிலையில், முதன்முதலில் 2018-ல் சர்வதேச சைகை மொழிகள் தினம் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளின் நினைவாகவே சர்வதேச சைகை மொழி தினம் உலகளாவிய அளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சைகை மொழி என்பது எளிய தகவல்களைக் கூட சைகைகள் மூலம் மற்றவர்களுக்குத் துல்லியமாகக் காட்சிப்படுத்தும் ஒரு தனித்துவமான கலை வடிவமாகும்.
சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த சைகை மொழி உலகெங்கிலும் உள்ள சிறப்பு திறன்கள் கொண்ட மக்களை ஒன்றாக இணைக்க உதவுகிறது.
உலக அளவில் சுமார் 7.6 கோடி பேர் காது கேளாதவர்களாக உள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக 82 சதவீதம் பேர் வளரும் நாடுகளில்தான் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களிடம் உலகளவில் ஏறக்குறைய 340 விதமான சைகை மொழிகள் பயன்பாட்டில் உள்ளன.
உலக மக்கள்தொகையில் 20% மக்களுக்கு லேசான செவித்திறன் குறைபாடும், கிட்டத்தட்ட 5% மக்களுக்கு சற்று தீவிர செவித்திறன் குறைபாடும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
உலகமக்கள் தொகையில் 18 சதவீதமும் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2.21% அதாவது மூன்றுகோடி மக்களும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.
இவர்களுள் பேச்சு மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் 26% உள்ளனர், அதில் 29% பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள்.
சைகை மொழிகள் ஏன் முக்கியம்:
உலகெங்கிலும் உள்ள பெற்றோர்கள் மத்தியில் தங்கள் காது கேளாத குழந்தைகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளுவது என்று தெரியவில்லை என்று ஆராய் சில கூறுகின்றன.
இதற்கு முக்கிய காரணம் சைகை மொழியை பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் இல்லை என்பதுதான்.
காதுகேளாமை உள்ளவர்களுக்கான தகவல் தொடர்புகளை எளிதாக்குவதில் சைகை மொழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் மொழியியல் அடையாளத்தை உறுதி செய்வதற்கும் அணுகலை மேம்படுத்துவதற்கும் சைகை மொழிகளை ஆதரிப்பதும் மேம்படுத்துவதும் முக்கியமானது.
உலக சுகாதார அமைப்பு தகவலின்படி இந்தியாவில் 6.3 கோடி பேர் காது கேளாதோர் உள்ளனர்.
இவ்வளவு பெரிய புள்ளி விவரங்கள் இருந்தும் கூட 120 அதிகமான இந்திய மக்கள் தொகையில் ஒரு சிலர் மட்டுமே காது கேளாதோருடன் தொடர்பு கொள்ளும் அறிவை பெற்றுள்ளனர்.
உலகின் பெரும்பாலான மக்கள் தங்கள் தாய் மொழியைத் தவிர ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் கற்றுகொள்ள பெரிதும் ஆர்வம், காட்டுகின்றனர்.
ஆனால், உலகின் மூத்த மொழியாக இருந்த சைகை மொழியை இன்று பலரும் மறந்து விட்டனர்.
மனிதர்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு முதலில் சைகை மொழியை பயன்படுத்தியதாகவும் பின்னரே எழுத்து, பேச்சு வடிவங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது.
தற்போது சைகை மொழிக்காக பல புதிய வடிவங்களில் செயலிகள் அறிமுகபடுத்தப்பட்டு வருகின்றன.
சில செய்தி நிறுவனங்கள் காது கேளாதோருக்கென பிரத்யோகமாக செய்தி வாசிப்பாளர்களை நியமன செய்துள்ளது பாராட்டதக்கதாகும்.
இந்த ஆண்டிற்கான சர்வதேச சைகை மொழிகள் தினத்தின் மையக்கருத்து செவித்திறன் குறைபாடு உடையவர்களின் மனித உரிமைகளை அறிவித்தல் என்பதாகும்.
சமுதாயத்தில் மற்றவர்களைப் போலவே காதுகேளாதோருக்கும் சமமான உரிமைகள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.
இவர்கள் தினமும் சந்திக்கும் பல்வேறு சமூக மற்றும் நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும், இவர்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்துச் செயல்படுத்துவதும் அரசின் முக்கியக் கடமையாகும்.
சமூகத்தில் காது கேளாதோர் சந்திக்கும் பிரச்சினைகள், கோரிக்கைகள், அவர்களுக்கான வசதிகளை உருவாக்குதலை ஒவ்வொரு நாடும் பரிசீலிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.
- நன்றி : ஈ டிவி பாரத் இதழ்
