நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு ஜாதிய அடையாளங்களுடன் வரக்கூடாது என நெல்லை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லையில் உலக புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் உள்ளது. இங்கு ஆனி பெருந்திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறும். அந்த நேரத்தில் 570 டன் எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர்கள் பக்தர்களால் நான்காவது வீதிகளிலும் இழுத்துவரப்படும். இந்தாண்டு தேரோட்டம் வருகிற 8-ஆம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு ஜாதிய அடையாளங்களுடன் வரக்கூடாது என நெல்லை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஜாதி ரீதியான கொடிகள், பனியன்கள் அணிந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்தாண்டில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டும் அதேபோல் ஏதாவது செயல்பாடுகள் இருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்படும். தேரோட்டத்திற்கு வருவோர் ஜாதி சம்பந்தமான பனியன், கொடிகள், பேண்டுகள் அணிந்து வரக்கூடாது. 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.