டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி – சென்னை அண்ணா பல்கலை மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

Estimated read time 1 min read

டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலியாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் டெங்கு மற்றும் உண்ணிக் காய்ச்சல் பரவல் தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பல்கலைக்கழக வளாகம், விடுதிகள், உணவகங்கள் மற்றும் உணவு தயாரிக்கும் கூடங்களில் போதிய சுகாதார வசதிகள் இல்லாததும், குடிநீர் உள்ளிட்ட தண்ணீரில் புழுக்கள் இருந்ததும் ஆய்வில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பல ஆண்டுகளாக முறையாக தூய்மைப் பணி மேற்கொள்ளப்படாத விடுதிகள், அலுவலகங்கள் மற்றும் வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில் அக்டோபர் 1 முதல் 4-ம் தேதி வரை 4 நாட்களுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திலேயே தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த நாட்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு மற்றும் உண்ணிக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ள மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாமும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author