பெல்ஜியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை ஆலை மற்றும் எத்தனால் உற்பத்திக்கான பிரம்மாண்ட இயந்திரம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக வலம் வருகிறது. சுமார் 200 டன் எடையைக் கொண்டுள்ள இந்த மிகப்பெரிய இயந்திரத்தை உரிய இடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக 308 சக்கரங்களைக் கொண்ட ராட்சத லாரி பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடல் வழியாக ஒடிசாவில் உள்ள பாராதீப் துறைமுகத்திற்கு வந்தடைந்த இந்த வாகனம், ஜார்கண்ட் மற்றும் பீகார் வழிகளைக் கடந்து தற்போது உத்தரப் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது.
இந்த பிரம்மாண்டமான வாகனத்தின் நீளம் மற்றும் அகலத்தைக் கருத்தில் கொண்டு, அதன் பாதை முழுவதும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, வாரணாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்திற்குத் தடையாக இருக்கும் இரண்டு நடை மேம்பாலங்கள் மற்றும் ஒரு மேம்பாலம் ஆகிய மூன்று பாலங்களை இடித்துவிட்டு, பின்னர் அவற்றை மீண்டும் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய இயந்திரம் நகர்ந்து செல்வதைக் காண வழியெங்கிலும் ஏராளமான பொதுமக்கள் நேரில் கூடி ஆர்முடன் பார்த்து வருகின்றனர்.
இந்த ராட்சத லாரியின் பாதுகாப்பான பயணத்திற்காகக் காவல்துறையினரும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளும் இணைந்து சிறப்புப் பாதுகாப்புகளை வழங்கி வருகின்றனர். சாலைகள் குறுகலாக இருக்கும் இடங்களில் உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு லாரி பத்திரமாக நகர்த்தப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
