“திருப்பதி போக பிளான் பண்றீங்களா?”.. ஜனவரி தரிசன டிக்கெட் வெளியீடு..  

Estimated read time 1 min read

திருப்பதி ஏழுமலையானை ஜனவரி 2027-ல் தரிசிக்கத் திட்டமிடும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஜனவரி மாதத்திற்கான பல்வேறு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு அட்டவணையை அறிவித்துள்ளது. அக்டோபர் 19-ம் தேதி காலை 10 மணி முதல் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளது. இந்தச் சேவைகளுக்கான மின்னஞ்சல் குலுக்கல் பதிவு அக்டோபர் 21-ம் தேதி காலை 10 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு செய்யப்படும் பக்தர்கள் அக்டோபர் 21 முதல் 23-ம் தேதி மதியம் 12 மணி வரை கட்டணத்தைச் செலுத்தலாம்.

அக்டோபர் 22-ம் தேதி காலை 10 மணிக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அன்று மாலை 3 மணிக்கு மெய்நிகர் சேவைக்கான ஒதுக்கீடு நடைபெறும். அக்டோபர் 23-ம் தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண டோக்கன்களும், காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளும் வழங்கப்பட உள்ளன. அன்று மாலை 3 மணிக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதையடுத்து, அக்டோபர் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளும், மாலை 3 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவும் தொடங்குகிறது.

ஜனவரி மாதத்தில் திருப்பதி செல்ல விரும்பும் பக்தர்கள், முன்பதிவு தேதிகளைத் தவறவிடாமல் கவனிப்பது அவசியம். டிக்கெட் மற்றும் தங்கும் அறைகளைப் பெறுவதற்கு தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான வழியாக மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் தங்கும் அறைகளுக்கான ஒதுக்கீடு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்குவதால், தேவையான விவரங்களை முன்கூட்டியே தயாராக வைத்துக்கொள்வது உதவியாக இருக்கும். ஜனவரி மாத தரிசனத்திற்கான திட்டமிடலை இப்போதே தொடங்கி, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Please follow and like us:

You May Also Like

More From Author