அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டியில் பேரணியின் போது, நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 22 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, துப்பாக்கிக் கலாச்சாரம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. இதனால், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, சமீப காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டியில் பேரணியின் போது, நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். சமீபத்தில் நடந்த ரக்பி விளையாட்டுக்கான சூப்பர் பவுல் சாம்பியன்ஸ் ஆட்டத்தில், கன்சாஸ் சிட்டி அணி வெற்றி பெற்றது. இதனைக் கொண்டாடும் வகையில், கன்சாஸ் நகரில் உள்ள தெருக்களில் ரசிகர்கள் பேரணியாக சென்றனர்.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பேரணியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென கூட்டத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. இதனால், பேரணியாக சென்ற ரசிகர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், காயமடைந்த 22 பேர் காயமடைந்தனர். போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.