Web team
கவி வானம் ! நூல் ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
தமிழ்மணி புத்தகப் பண்ணை, 281, காயிதே மில்லத் நகர்,
திருவல்லிக்கேணி, சென்னை – 600 005.
பக்கம் : 192, விலை : ரூ. 200
*****
புலிக்குப் பிறந்த்து பூனையாகாது என்ற பொன்மொழியை மெய்ப்பிக்கும் வண்ணம் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் என்ற கவிப்புலிக்குப் பிறந்த கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் படைத்துள்ள கவி வானம் கவிதை நூல் ஆசிரியரின் கவி மனத்தைப் பறைசாற்றுகின்றது. பயணக் கட்டுரை நிறைய படித்து இருக்கிறோம். ஆனால் வெளிநாடு சென்று கண்ட காட்சிகளை கவிதை வரிகளால் காட்சிப்படுத்தி வென்றுள்ளார், பாராட்டுக்கள்.
எல்லோராலும் சுற்றிப்பார்த்த இடங்கள் பற்றி கவிதை வடித்திட இயலாது. நூலாசிரியர் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் அவர்களுக்கு, கண்ட காட்சிகளை கவிதையாக்கும் ஆற்றல் கைவரப்பெற்ற காரணத்தால் மிக நன்றாக வடித்துள்ளார். பலர் வெளிநாடுகள் செல்கிறார்கள். ஆனால் வெளிநாடு சென்ற எல்லோராலும் கவிதை வடிக்க முடியாது.
இயல்பாக கவிதை மனம் இருந்தால் மட்டும் எழுத முடியும்.
தென்ஆப்பிரிக்காவின் டர்பன் என்று படித்தவுடன் நம் நினைவிற்கு வருவது மாமனிதர் காந்தியடிகள் தான். அங்கு சென்ற நூலாசிரியர் வடித்த கவிதை இதோ!
டர்பன் கடற்கரை
அலைகடல் சாலையும் இணைந்தே
அழகொளிப் பாலம் உண்டு
தலமுள் உலக மக்கள்
தகுதியாய் இங்கே கண்டோம்
பொழுது போக்க நன்றாய்ப்
புதுமைப் பூங்கா தோட்டம்
தொழுது வணங்கும் நீராய்த்
தொன்மை டர்பன் கரையே!
(2015 தென் ஆப்பிரிக்கா பயணத்தின் போது டர்பன் கடற்கரையில் எழுதியது)
ஒவ்வொரு கவிதையின் கீழும் எங்கு பயணம் செய்த போது எழுதியது என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். நாள் குறிப்பேடு எழுதும் பழக்கம் இருந்தாலும் நூல் ஆசிரியருக்கு நினைவாற்றல் அதிகம் என்பதையும் நூல் உணர்த்துகின்றது. பாராட்டுக்கள்.
உலகின் வல்லரசு நாடு என்று அறியப்படும் அமெரிக்கா சென்று வந்ததையும் கவிதையாக்கி உள்ளார். நூலாசிரியர் முந்தைய நூலில் பயண அனுபவத்தை பயணக் கட்டுரையாக வடித்தார். இந்த நூலில் கவிதையாக வடித்துள்ளார். நல்ல முன்னேற்றம்.
நற்றவத்தின் பல்கலை!
அமெரிக்கா பல்கலையேல்
அறிவுக்கோர் உறைவிடமாம்!
தனக்குவமை இல்லாதோர்
தன்நிகரில் சிறப்பிடமாம்!
கனக்டிக்கெட் நகர்தனிலே
காண்பதெல்லாம் பல்சுவையாம்!
கணக்கில்லா அறிவுடையோர்
கண்டெடுத்த நல் நிலையம்!
நூல் ஆசிரியர் பெயர் திருவள்ளுவர் என்பதனால் திருக்குறள் மீது ஈடுபாடு கொண்டு எழுதும் கவிதைகளில் திருக்குறள் சொற்கள் பெருமளவு வருகின்றன. படிக்க இனிமையாகவும், சுவையாகவும் உள்ளன. பாராட்டுக்கள்.
இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைகளை எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் பெருங்கவிக்கோ. அவரது வழித்தோன்றலான நூல் ஆசிரியரும் ஈழம் பற்றி எழுதிய கவிதை சிந்திக்க வைத்தது.
ஈழப் பொங்கல்!
ஈழத்து மக்கள் மண்ணில்
இன்னல்கள் தீரா வண்ணம்
வேழங்கள் சாய்ந்து பெண்கள்
விதவையாய் வாழும் ஓலம்
தாளங்கள் தட்டி நின்றாய்
தக்கதைப் பெற்ற கீழோர்
ஓலங்கள் தீர்க்க இந்தியா
உணர்த்துவோம் ஈழப் பொங்கல்!
பெருங்கவிக்கோ அவர்கள் வடித்த சேது காப்பியம் நான் படித்துள்ளேன்.நூல் மதிப்புரையும் இணையங்களில் பதிந்துள்ளேன். இந்த காப்பியங்கள் அவரைத் தவிர வேறு யாராலும் எழுதிட முடியாது. வாழும் தமிழ் அறிஞர்களில் கவி ஆற்றல் மிக்கவர். அவரின் சேது காப்பியம் பற்றி அவரது மகன் கவிதைகளால் மதிப்புரை தந்து பாராட்டி உள்ளார். இந்தக் காலத்தில் இப்படி ஒரு மகன் கிடைப்பது அரிது. தந்தையோடு சேர்ந்து தமிழ்ப்பணி ஆற்றுகின்றார். சராசரி மனிதர்களைப் போல வணிகவியல் பட்டம் படித்து முடித்துவிட்டு, வங்கி வேலைக்குச் செல்லாமல்,தமிழ்ப்பணிஇதழ் நடத்துகின்றார், தந்தை செல்லும் வெளிநாடுகளுக்கு உதவியாக உடன் செல்கிறார். தந்தையின் சேது காப்பியத்தைப் பாராட்டி கவிதைகள் வடிக்கிறார். இப்படி ஒரு மகன் எனக்கில்லையே என்று இலக்கியவாதிகளை ஏங்க வைக்கின்றார்.
செந்தமிழ்ச் சேது காப்பியம் !
தலைமுறை தலைமுறை வென்ற தமிழ்க்குடி
தழைத்த தக்கோர் வலிமைப் பெருங்குடி
உழைத் தள்ளி உலகோர் மாட்சி!
ஏட்டைப் படைத்தார் இதயம் ஈர்த்தார்
கூட்டும் நெறியைக் கொடையெனக் குவித்தார்!
வருடா வருடம் தண்ணீர் கேட்டு கர்னாடகத்திடம் கெஞ்சுவதும், அவர்களும் மிஞ்சுவதும் வாடிக்கை. நீதிமன்ற தீர்ப்பினைக் கூட மதிக்காதவர்கள், முப்போகம் கண்ட விவசாயிகள் ஒரு போகத்திற்கு தண்ணீர் இன்றி வாடுகின்றனர். காவிரி பற்றியும் கவிதை வடித்துள்ளார்.
விடும் என் காவிரிக் கண்ணை?
இந்தியா ஒருமித்த நாடு
இன்பம் இணைந்தே நீ தேடு.
சந்ததி வழிவழி நீரைச்
சதி வலை பின்னுதல் தீது.
முந்தைய தமிழரின் மோசம்
முறைதனிமை காணாத சோகம்
நிந்திக்கும் கர்நாடக மண்ணே
நீதியைக் கண்டு நீ தேறு!
பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் வடித்துள்ளார். நூலில் பின் அட்டையில் பெருங்கவிக்கோ தந்த அணிந்துரைக் கவிதையை அவரது கையெழுத்திலேயே பிரசுரம் செய்தது சிறப்பு. ஆசிரியரைக் கொன்ற மாணவன் செய்தி படித்ததும். கவிதை வடித்துள்ளார் நன்று. கச்சத்தீவு பற்றி, முல்லைப் பெரியாறு பற்றி காந்தியடிகள் பற்றி, லிங்கன் பற்றி, கவிஞர் வாலி பற்றி, கவிஞர் ஈரோடு தமிழன்பன் பற்றி இப்படி பல பற்றி கவிதை வடித்துள்ளார்.
தெளிந்த நீரோடை போல நல்ல நடை. படித்தால் படித்த வாசகர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் கவிதைகள் உள்ளன. குறிப்பாக வடமொழி எழுத்துக்கள் இன்றி நல்ல தமிழில் எழுதி உள்ளார். சில கவிஞர்கள் வலிந்து வடமொழி எழுத்துக்களுடன் எழுதி வரும் அவலத்தையும் காண்கிறோம். இதில் கலப்படமின்றி நல்ல தமிழில் எழுதியிருப்பது சிறப்பு.
நூலாசிரியர் அவரது இல்லத்தரசி பற்றியும் கவிதை வடித்துள்ளார்.
பொன்விழா காணும்
என் மனைவி பொற்பரி
(பொன். பரிமளா) நீடு வாழ்க!
மக்களைப் பெற்று மதிகல்வி தந்து உயர்
தக்கபண் பாட்டுச் தகுதி தந்து – தக்கோராய்
சக்கரமாய்ச் சுற்றியே சந்த்தியும் மேலோங்கு
பக்கமாய் ஆனாளே பார்!
நூலாசிரியரின் தந்தை பெருங்கவிக்கோ அவரது மனைவி சேதுமதிக்கு கோவில் கட்டியவர். இவர் இவரது மனைவி பரிமளாவிற்கு மனக்கோயில் கட்டி உள்ளதை கவிதை பறைசாற்றுகின்றது.மனைவியைப் பாராட்டி கவிதை எல்லோரும் எழுதுவதில்லை .ஒரு சிலர் மட்டுமே எழுதுகின்றனர்
நூலின் இறுதியில் உள்ள வாழ்க்கைப் பயணம் தொகுப்பு நூலாசிரியரின் தமிழ்ப்பணியை பறைசாற்றுகின்றது. பாராட்டுக்கள்.