யாழ்.

யாழ் !

நூல் ஆசிரியர் : கவிஞர் சுந்தரவள்ளியப்பன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

நண்பர்கள் பதிப்பகம், 145 பி, கோபால கிருஷ்ணா காம்ப்ளக்ஸ், நேதாஜி கௌர்,

குடியாத்தம். 632 602.

வேலூர் மாவட்டம், பக்கம் : 90, விலை : ரூ. 80

******

நூல் ஆசிரியர் கவிஞர் சுந்தர வள்ளியப்பன் அவர்கள் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டே தமிழ்ப்பணியும் செய்து வருகிறார். இது இவருடைய 10வது நூல். முதல் காதல் கவிதை நூல் எல்லோருக்கும் முதல் நூல் காதல் கவிதையாக இருக்கும். இவருக்கு 10ஆவது நூல் காதல் கவிதையாக மலர்ந்தது. காதல் ரசம் சொட்ட சொட்ட வடித்துள்ளார் பாராட்டுக்கள்.

காதல் கவிதைகளை எல்லா வயதினரும் ரசிக்கலாம். இளையோர் மட்டுமல்ல முதியோரும் ரசித்து மலரும் நினைவுகளை அசை போடலாம். ‘யாழ்’ என்ற நூலின் தலைப்பு நன்று. அன்புக்காதலிக்கு கற்பனையாக யாழ் என்று நல்ல பெயர் சூட்டி கவிதைகள் வடித்துள்ளார். யாழ் என்றதும் இசைக்கருவி யாழ் நினைவும் ,இலங்கை யாழ்ப்பாணம் நினைவும் வந்தன .

நண்பர்கள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் மாற்றுத்திறன் நண்பர்கள் மட்டும் பணிபுரியும் பதிப்பகம். பாராட்டுக்கள். பதிப்பகத்தின் இணை ஆசிரியர் நா. ராமேசு சுடலை அவர்களின் மதிப்புரை நன்று. தண்டபாணி ரவி பதிப்பாசிரியரின் பதிப்புரை நன்று.

நீளமான

என்

கேள்விகளுக்கு

என் நாயகியின் பதில்

ம் !

உண்மை தான். சிலரின் குணம் அப்படி. வளவளவென்று பேசாமல் பதிலாக ம் ம் என்று சொல்லும் அழகு அழகு தான். காதல் அனுபவம் உள்ள வாசகர்களுக்கு நன்கு விளங்கிடும் அற்புத உணர்வை கவிதையாக வடித்துள்ளார்.

இரவெல்லாம்

சிறிது

தூக்கம்
மிகுதி

ஏக்கம்

எனக்கு

உனக்கு ?

யாழ்?

காதல் வயப்பட்டவர்களுக்கு இரவு தூக்கம் சுருங்கி விடும். காதலனான எனக்கு தூக்கம் குறைந்து விட்டது. காதலியான யாழே உனக்கு தூக்கம் எப்படி என்று வினவுகின்றார். யாழ்க்கும் அப்படித்தான் இருக்கும். அதுதானே காதல் விளைவு.

என்

முகம்

வேர்வை

துளி

துடைத்துக்

கொள்ள
உன்

முந்தானை

கேட்கிறது !

காதலன் வியர்வை துடைத்துக் கொள்ள காதலியின் முந்தானை கேட்கிறார். இப்போது தாவணி அணிந்தால் தானே முந்தானை தருவார்கள். சுடிதார் அணிந்தாலும் துப்பட்டா அணிவதில்லை. அப்படியே அணிந்தாலும் அழுக்காகி விடும் என்று தர மறுப்பார்கள். இருந்தாலும் ரசிக்கலாம்.

என் தேவதையே

நீ

பிழையெனக் கொள்ளாதே
உன் முத்தமெனும்

மருந்து

என்னை

இன்னும் ஒரு
நூற்றாண்டுக்கு

வாழ

வைக்கும்!

காதல் கவிதைகளில் முத்தம் இல்லாமலா இருக்கும். இருக்கின்றது. இனிக்கின்றது. உமிழ்நீர் பரிமாற்ற உன்னதம் பற்றி உயர்வாக உணர்த்தி உள்ளார். வாழ்நாளை நீட்டிக்கும் அருமருந்து முத்தம் என்கிறார் காதலர்கள், பாராட்டுவார்கள். நானும் பாராட்டுகின்றேன்.

உள்

வாங்கிய

உன்

பேச்சை

உதிர்க்க

மறுக்கிறது
என்

கைபேசி

நீ

அதனிடம்

என்ன

சொன்னாய் ?

கைபேசி பழுதாகி அவள் பேசியது, கேட்கவில்லை. அதனை வித்தியாசமாக இப்படிச் சொல்கிறார். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லி உள்ளார். காதலுக்கு பொய் அழகு என்பதும் உண்மையாகி விடுகின்றது.

உன்

பெயரே

என்னை

உற்சாகம்
படுத்துகிறது

யாழ்!

காதலனுக்கு காதலியின் பெயர் உற்சாகப்படுத்தும் என்பது உண்மை தான். அவள் பெயரை யார் உச்சரித்தாலும் உடன் திரும்பிப் பார்க்கும் உணர்வும் வருவது தான் காதல்.

ஏ…

விடியலே

வேதனை

படுத்தாதே
விரைவாய்

வராதே

நான்

என்னவளுடன்
கனவில்

உலவ

விடு…

விடிய விடிய இவர் கனவு காணுவதற்காக ஓய்வறியாச் சூரியனை ஓய்வெடுத்து தாமதமாக வா என ஆணையிடும் யுத்தி நல்ல நகைச்சுவை தான்.

ஒரு

நன்செய்

காடு

புன்செய்

காடாய்
மாறியது

உன்

வரவில்!

நன்செய் புன்செய் என்று காட்டைச் சொல்கிறாரா ? அல்லது குறியீடாக தன்னையே சொல்கிறாரா ? என்பது எழுதிய அவருக்கே வெளிச்சம். காதலுக்கும் கவிதைக்கும் கற்பனை அழகு தான்.

நினைத்தால்

வருவது

கவிதை

அல்ல
உன்னை

நினைத்ததால்

வருவது

கவிதை
யாழ்!

காதலியான யாழை நினைத்ததும் கவிதை குற்றால அருவியென கொட்டுகின்றதாம். காதல் கவிதை வழங்கிடும் அட்சயப் பாத்திரம் தான் காதலி முகம். காதல் நினைவு சுவையானது, சுகமானது, இதமானது, பதமானது, இனிமையானது, மறக்காதது.

உன்

மௌனம்

தான்

என்னை
ஈர்க்கும்

காந்தம்

யாழ்!

காதலியின் மௌனம் இனிமை தான். மணமாகி மனைவியானதும் மௌனனம் காணாமல் போய் சிலர் அல்லும்பகலும் புலம்பிக் கொண்டே இருப்பதும் உண்டு. மௌனம் நிலையானது அன்று.

நாயகி

உன்

கூந்தல்

முடிதலில்

நான்
சிறை

பட்டு

உள்ளேன்

அவிழ்த்து
விடு

என்னை !

நூலாசிரியர் கவிஞர் சுந்தர பழனியப்பன் பழைய காலத்து காதலியை நினைவில் கொண்டே பல கவிதைகள் வடித்துள்ளார். இன்றைய காதலி பலரும் கூந்தல் முடிவதில்லை. அவிழ்த்தே விட்டு உள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இக்காலக் காதலியிடம் கூந்தல் அவிழ்த்து விடு என்று சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதில்லை.

யாழே!

கதகதப்பு

தேடாத

உன்

அரவணைப்பு

தேடும்

இதயம் நான்!

உடலை நேசிக்கவில்லை, உள்ளத்தைத் தான் உண்மையாகவே நேசிக்கின்றேன் என்று தன்நிலை விளக்கம் தரும் விதம் நன்று பாராட்டுக்கள்.

யாழே!

எந்தன்

வீட்டு ரோஜா
செடியின்

பூவில்

உந்தன்

முகம்!

பார்க்கும் இடமெல்லாம் காதலி யாழ் முகமே தெரிகின்றது என்று கவிதை வடித்துள்ளார். காதல் வயப்பட்டு காதல் உணர்வில் வாழும் நாட்கள் வசந்தமானவை. படிக்கும் வாசகர்களுக்கும் கடந்த கால மலரும் நினைவுகளை காதலி பற்றிய நினைவுகளை மலர்வித்து வெற்றி பெற்றுள்ளார். பாராட்டுக்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author