தமிழ்நாடு இளைஞர்கள் புதுதில்லி பயணம்

Estimated read time 1 min read

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50 இளைஞர்கள், மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ (ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத்) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ‘யுவ சங்கம்’ திட்டத்தின் 7-வது கட்டத்தின் மூலம் கல்வி மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றப் பயணமாக புதுதில்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர். தமிழக இளைஞர்களைத் தேர்வு செய்யும் ஒருங்கிணைப்பு நிறுவனமாகச் செயல்படும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துடன், தில்லி பல்கலைக்கழகம் இத்திட்டத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பொறுப்பு துணைவேந்தர் மூத்த பேராசிரியர் சுலோச்சனா சேகர், பதிவாளர் பேராசிரியர் ஆர். திருமுருகன் மற்றும் மூத்த பேராசிரியர்கள் இந்த பயணத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். அக்டோபர் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஒரு வார காலம் நடைபெறும் இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு, குழுவினர் நவம்பர் 3-ந் தேதி சென்னை திரும்ப உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களில் இருந்து பல்வேறு தேர்வு முறையின் மூலம் 50 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் 5 பேராசிரியர்களும் உடன் செல்கின்றனர். நிகழ்ச்சியில் பேசிய பதிவாளர் பேராசிரியர் ஆர். திருமுருகன், சுற்றுலா, பாரம்பரியம், முன்னேற்றம், தொழில்நுட்பம், மக்கள் இடையிலான தொடர்பு ஆகிய ஐந்து முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்தியாவின் பன்முகத்தன்மையை நேரடியாக அறிந்துகொள்ள இவ்வாய்ப்பை இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பொறுப்பு துணைவேந்தர் சுலோச்சனா சேகர் பேசுகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களிடையே பண்பாட்டு ஒற்றுமையை வளர்ப்பதும், தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றார். தில்லியின் உணவு வகைகள், பாரம்பரியம், காலநிலை, வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்வதுடன், தமிழகத்திற்கும் தேசிய தலைநகருக்கும் இடையிலான ஒற்றுமை, வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் நூலகர் டாக்டர் ஆர். பரமேஸ்வரன், பேராசிரியர்கள் பாலசுப்பிரமணிய ராஜா, ரேணுகாதேவி, ராதா, டாக்டர் முத்துப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு பாரம்பரிய அங்கவஸ்திரங்கள் அணிவித்து கவுரவிக்கப்பட்டது. பின்னர், பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பேருந்து கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பயணம் இளைஞர்களிடையே பண்பாட்டு புரிதலையும் தேசிய ஒருமைப்பாட்டையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author