தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ள சூழலில் தினசரி உணவுத் தேவைக்குக்கூட வருவாய் ஈட்ட முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும் ஓட்டுநர்கள் தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.’ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில்,தமிழ்நாடு முழுவதும் ஆட்டோவில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்த ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி, தமிழக அரசு இன்று புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 67-ன்கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதற்கு முன்பு 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பழைய கட்டண முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டு, புதிய கட்டணப் பட்டியல் நடைமுறைக்கு வந்துள்ளது.
புதிய கட்டண விவரங்கள்:
வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையின்படி, ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச தூரம் மற்றும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இனி ஆட்டோவில் ஏறினாலே முதல் 1.8 கிலோ மீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். இதற்கு முன்பு இந்த கட்டணம் ரூ.25-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இது தவிர, மலைப்பாதை மற்றும் இரவு நேர பயணங்களுக்கும் சிறப்பு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மலைப்பாதைகளில் (Ghat roads) குறைந்தபட்ச கட்டணத்தை விட 1.2 மடங்கு அதிகமாக ரூ.60 வசூலிக்கப்படும். மேலும், மலைப்பாதைகளில் கூடுதல் கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.30 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் இரவு நேரங்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையிலும், ஓட்டுநர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை சாதாரண கட்டணத்தை விட 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பயணத்தின் நடுவே ஆட்டோவை காத்திருக்கச் செய்தால் 1 நிமிடத்திற்கு ரூ.1 காத்திருப்பு கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் மத்தியில் வரவேற்பும் விமர்சனமும்:
கடந்த 13 ஆண்டுகளாக எரிபொருள் விலை உயர்வு மற்றும் உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஓட்டுநர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அரசு கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது. அதேசமயம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள சூழலில், ஆட்டோ கட்டணமும் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது நடுத்தர மக்கள் மற்றும் தினசரி பயணிகளுக்கு கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதால், பொதுமக்கள் தரப்பில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து ஆணையம் மற்றும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் இந்த புதிய கட்டண முறையை உடனடியாக அமல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
