இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருவது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இந்தியாவின் மக்கள் தொகையைக் கணக்கிடும் டிஜிட்டல் பலகை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 148 கோடியைக் கடந்துள்ளதாகக் காட்டப்பட்டிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், நவம்பர் 10-ம் தேதி இரவு 7.27 மணிக்கு இந்தியாவின் மக்கள் தொகை 1,48,16,37,145 எனக் காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது சுமார் 148.16 கோடி பேர். இந்த எண்ணிக்கை எங்கிருந்து பெறப்பட்டது, அது உண்மையான நேரடி மக்கள் தொகைக் கணக்கா எனப் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
LIVE INDIA POPULATION COUNTER by All India Institute of Medical Sciences (AIIMS) goes VIRAL
Country APPROACHING 1.5 BILLION MARK https://t.co/CZrSEEGnrl
— RT (@RT_com) November 10, 2026
இந்த விவாதங்களுக்கு இடையே, யாஷ் என்ற சமூக வலைதளப் பயனர், அந்த டிஜிட்டல் பலகையில் காட்டப்பட்ட மக்கள் தொகை விவரத்தைச் சரிபார்க்க ‘குரோக்’ செயற்கை நுண்ணறிவுச் செயலியிடம் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த குரோக், நவம்பர் 10-ம் தேதி எய்ம்ஸ் டெல்லி பலகையில் சுமார் 148.16 கோடி மக்கள் தொகை காட்டப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகைக் கணிப்புகளுடன் பொதுவாகப் பொருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், டிஜிட்டல் பலகையில் காட்டப்படும் எண்ணிக்கையை இந்தியாவின் துல்லியமான நேரடி மக்கள் தொகைக் கணக்காகக் கருத முடியாது. மக்கள் தொகை மதிப்பீடுகள் பிறப்பு, இறப்பு மற்றும் பிற புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. இந்த நிலையில், 150 கோடியை இந்தியா நெருங்கிவிட்டதா என்ற விவாதத்தை இந்த வீடியோ மீண்டும் கிளப்பியுள்ளது.
