பால் வாங்கும் பொதுமக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அமுல் நிறுவனம் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. அமுல் பிராண்டின் கீழ் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வரும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு , நாளை (நவம்பர் 12) முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்துகிறது.
பால் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலுக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வில் அமுல் தாஜா டோன்டு பால் லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 6 சதவீத கொழுப்புச் சத்து கொண்ட அமுல் கோல்டு பால் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக அமுல் பால் வாங்கும் குடும்பங்களின் மாதாந்திர செலவுகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தினசரி பால் பயன்படுத்தும் குடும்பங்கள் மற்றும் தேநீர், காபி கடைகளுக்கு இந்த விலை மாற்றம் கூடுதல் சுமையாக அமையலாம்.
ஏற்கெனவே நடப்பாண்டு மே மாதத்தில் அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உற்பத்தி முதல் பதப்படுத்துதல் வரையிலான செலவுகள் உயர்ந்துள்ளதே இந்த முடிவுக்குக் காரணம் என நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. நாளை முதல் புதிய விலை அமலுக்கு வருவதால் அமுல் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது செலவுகளை அதற்கேற்ப மாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
