பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தைப் பிரித்து புதிய மாகாணங்களை உருவாக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராகத் தீவிர எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கராச்சி நகரில் ஆயிரக்கணக்கான தேசியவாத கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் பேரணியானது, நாட்டின் ராணுவத் தலைமை மற்றும் ஆளும் ஆட்சிக்கு எதிரான பெரும் அரசியல் கொந்தளிப்பாக மாறியுள்ளது.
அதாவது ‘ஜெய் சிந்து ரஹ்பர் கமிட்டி’ அமைப்பின் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் பஞ்சாப் ஆதிக்கத்திலுள்ள ராணுவ அமைப்பு ஆகியவை சிந்து மாகாணத்தின் அடையாளத்தையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் சிதைக்க முயல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
சிந்துவின் நிலங்கள், கடலோரத் தீவுகள் மற்றும் இயற்கை வளங்களைக் கைப்பற்றச் சதி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள சில தேசியவாத அமைப்புகள், இந்த விவகாரம் முற்றிப் போனால் தனி ‘சிந்துதேசம்’ கோரி போராட்டம் தீவிரமடையும் என்றும், பஞ்சாபுக்கான பொருளாதாரத் தடையை ஏற்படுத்துவோம் என்றும் எச்சரித்துள்ளன.
நிர்வாகச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் புதிய மாகாணங்களை உருவாக்குவது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தரப்பில் பேசப்பட்டதும், இதற்குப் பிபிபி கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மறுபுறம், எம்.க்யூ.எம்-பாகிஸ்தான் அமைப்பு இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
மேலும் வரும் நவம்பர் 29-ஆம் தேதி சிந்துப் பிரிவினைக்கு எதிரான அமைப்புகளும், அதனை ஆதரிக்கும் எம்.க்யூ.எம்-பாகிஸ்தான் கட்சியும் ஒரே நாளில் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் மோதல் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
