சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினும் மே 16ம் நாள் பெய்ஜிங்கிலுள்ள சொநான்காயில் சிறிய அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரு நாட்டு அரசுத் தலைவர்கள் காட்சி மண்டபங்களில் நடந்து அருமையான காட்சியைக் கண்டு ரசித்துக் கொண்டே உரையாடி, சுமூகமான சூழ்நிலையில், பொது அக்கறை கொண்ட நெடுநோக்குப் பிரச்சினைகள் குறித்து ஆழமாகப் பரிமாறிகொண்டனர்.
அப்போது ஷிச்சின்பிங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், பல்வகை இன்னல்களையும் சவால்களையும் சீன மக்கள் சமாளித்து, உயர் தரமுள்ள வளர்ச்சி மற்றும் சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தை முயற்சியுடன் விரைவுபடுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் ரஷியா உள்ளிட்ட பிற நாடுகளுடன் இணைந்து, ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, உலகின் மேலாண்மைக்குரிய சரியான திசைக்கு வழிகாட்டி வருவதோடு, சர்வதேச நியாயம் மற்றும் நீதியைக் கூட்டாகப் பேணிக்காத்து, உலகின் அமைதி மற்றும் கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
சீனாவின் வளர்ச்சி போக்கு தடை செய்யப்படாது எனக் குறிப்பிட்ட புதின், சீனாவின் வளர்ச்சியை எந்தச் சக்திகளாலும் தடுக்க முடியாது எனத் தெரிவித்தார். மேலும், சீனா உள்ளிட்ட உலகிலுள்ள பிற தெற்கு நாடுகளுடன் இணைந்து ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, சர்வதேச ஒருங்கிணைப்பை சரிப்படுத்தி, சமத்துவம் வாய்ந்த உலக பலதுருவமயமாக்கத்தை கட்டியமைக்க ரஷியா பாடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் நெருக்கடி பிரச்சினை குறித்து இரு நாடுகளின் அரசுத் தலைவர்களும் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.