மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது பிரஜைகளை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவுக்கான திருத்தப்பட்ட பயண ஆலோசனையில், வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய தகவல்களை பிரதிபலிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
“குற்றம் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். சில பகுதிகளில் ஆபத்து அதிகரித்துள்ளது,” என்று அது கூறியது.
ஒட்டுமொத்த இந்தியாவின் பாதுகாப்பு தரவு நிலை 2 இல் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாட்டின் பல பகுதிகள்- ஜம்மு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை, மணிப்பூர் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் மட்டும் நிலை 4-இல் வைக்கப்பட்டுள்ளன.