முதலாவது சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி நவம்பர் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் தொடங்கியது. இதில், நுண்ணறிவு சார்ந்த வாகனம், பசுமை வேளாண்மை, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட கருப்பொருட்களை கொண்ட 5 முக்கிய கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த அதிக நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகமயமாக்கலில் தடைகளைச் சந்தித்து உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்ட பின்னணியில், உலகத்தை இணைத்து எதிர்காலத்தை உருவாக்குவது என்ற கருப்பொருள் கொண்ட இந்தப் பொருட்காட்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
பாதுகாப்பு மற்றும் நிலைப்பு, தடையற்ற மற்றும் உயர் செயல்திறன், திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை, பரஸ்பர நலம் மற்றும் கூட்டு வெற்றி ஆகியவை கொண்ட உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளைக் கூட்டாக உருவாக்க சீனா முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிவு, நமது வளர்ச்சி திசையுடன் மிகவும் ஒத்துப்போகிறது. சீனாவில் முதலீடு மற்றும் நீண்டகால வளர்ச்சியின் மீது நம்பிக்கை கொள்கின்றேன் என்று அமெரிக்காவின் ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சென் ஜியாலியாங் தெரிவித்தார்.
சீன சர்வதேச வர்த்தக முன்னேற்றச் சங்கம் வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, வெளிநாட்டு நிறுவனங்களில் 80 விழுக்காட்டுக்கும் மேலான நிறுவனங்கள், சீனாவில் தொழில் புரிவதற்கான சூழல் குறித்து மனநிறைவு தெரிவித்துள்ளன. 70 விழுக்காட்டு நிறுவனங்கள், சீனாவிலுள்ள தனது தொழில் சங்கிலி கட்டமைப்பு நிலையாக உள்ளது என்று கூறியுள்ளன. மேலும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சீனா இன்னும் ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்த இடமாகும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் 28ஆம் நாள் அறிவித்தது.உலகளாவிய பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் உறுதியற்ற தன்மை மற்றும் பலவீனமாகி வரும் நுகர்வு தேவை போன்ற சூழலில், பல நிறுவனங்களைப் பொறுத்த வரை, சீனாவுக்கு மாறாக, வேறு “உற்பத்தி மையத்தை” தேடி கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாகும் என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்தது.