சீனாவில் உள்ள ஜெஜியாங் என்னும் பகுதியில் சூ(54) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொடர் இருமல் பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக கடந்த 2 வருடங்களாக இவர் சிகிச்சை எடுத்து வருகிறார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து சூ கடந்த ஜூன் மாதம் அப்பகுதியில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு சென்றார். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு சிடி ஸ்கேன் பரிந்துரைத்தனர்.
அந்த சிடி ஸ்கேனில் சூ வினுடைய வலது நுரையீரலுக்குள் கட்டி ஒன்று ஒரு சென்டிமீட்டர் அளவில் இருப்பது தெரியவந்தது. அந்த கட்டி புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினார்கள். இதனை கேட்டு சூ மிகவும் அதிர்ச்சியானார். இதனை அடுத்து அவரை மேலும் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது நுரையீரலில் இருப்பது புற்றுநோய் கட்டி இல்லை, மிளகாய்த் துண்டு என கண்டுபிடித்தனர். இதனை சூவிடம் தெரிவித்த மருத்துவர்கள் அந்த மிளகாய் துண்டை அவரின் நுரையீரலில் இருந்து அகற்றினார்கள். மேலும் இது பற்றி சூ கூறும் போது கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக ஹாட்பாட் உணவு சமைத்தேன். அப்போது இந்த மிளகாய் நுனி நுரையீரலுக்குள் சென்றிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.