திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி திருமலை கோயிலுக்கு உலக முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தினமும் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை ஏழுமலையானை மனமுருக வேண்டி செல்கின்றனர்.
விழாக்காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு இனி ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும். அதற்கு மேல் வேண்டுமானால் ஒரு லட்டு ரூ.50 என்ற விலையில் வாங்கி கொள்ளலாம்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.
ஆதாரை காண்பித்தால் மட்டுமே கூடுதலாக ஒரு லட்டு ரூ.50-க்கு வழங்கப்படும். இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு லட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து தேவஸ்தானம் இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது.